

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மாநில அளவிலான பங்களிப்பார்கள் கூட்டம், சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு தலைமையில் நடந்த கூட்டத்தில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆ.பொன்னுசாமி, மாநில துணை செயலாளர் இரா.சரவணன் உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளில் இருந்து பழங்குடியின செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பழங்குடியின மக்களுக்கு, குறிப்பாக, ராணிப்பேட்டை கோட்டாட்சியர், காட்டு நாயக்கன் மக்களுக்கு சாதிச் சான்று வழங்க விண்ணப்பம் வாங்குவதை மறுப்பது, மதுரையில் மலை வேடன், காட்டு நாயக்கன், மலைக்குறவன், குருமன்ஸ் ஆகிய மக்களுக்கு இனச் சான்று வழங்கப்படாதது. 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் வன உரிமைச் சட்டத்தின் படி, பழங்குடியின மக்களுக்கு வன உரிமைச் சான்று மறுக்கப் படுவது குறித்து அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.
மேலும், பழங்குடியின மக்களுக்கு தாட்கோ மூலம் மானிய கடன் வந்தாலும், அவை வங்கிகளில் முடக்கப்படுவதாகவும், அதை கவனத்தில் கொண்டு தீர்வு காண வேண்டும். அத்துடன், ஈரோடு மாவட்ட மலையாளி, மலைப் புலையன், வேட்டைக்காரன், குறவன் ஆகிய இன மக்களை எஸ்டி பட்டியலில் சேர்க்க வேண்டும். மலைவாழ் மக்களின் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டன.
அதை பரிசீலித்து முதல் வருக்கும், ஒவ்வொரு துறைக்கும் அனுப்பவதாக தெரிவித்த அமைச்சர் வன்னியரசு, மாதத்துக்கு ஒரு முறை பழங்குடியினர் செயல்பாட்டாளர் கூட் டத்தை நடத்தி ஆய்வு செய்யப்படும் என உறுதியளித்தார்.
இதில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் என்.சுப்பையன், கூடுதல் செயலர் உமா மகேஸ்வரி, ஆதி திராவிடர் நல இயக்குநர் கி.செந்தில் ராஜ், பழங்குடியினர் நல இயக்குநர் அண்ணா துரை பங்கேற்றனர்.