தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் முதல் அலகில் சோதனை ஓட்டம்

அமைச்சர் நிர்மல் குமார் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் முதல் அலகில் சோதனை ஓட்டம்
Updated on: 
2 min read

தூத்துக்குடி: தீ விபத்தில் சேதமடைந்த தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் முதலாவது அலகில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து சோதனை ஓட்டத்தை தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு சொந்தமான தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 15.03.2025 அன்று இரவு அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 1 மற்றும் 2-வது அலகுகள் முழுமையாக சேதமடைந்தன. 3-வது அலகில் லேசான சேதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 3-வது அலகில் பழுது நீக்கப்பட்டு உடனடியாக மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

சேதமடைந்த 1 மற்றும் 2-வது அலகுகளில் ரூ.264 கோடி செலவில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 2-வது அலகு மீண்டும் மின் உற்பத்தியை தொடங்கியது. தொடர்ந்து 1-வது அலகிலும் சீரமைப்பு பணிகள் முடிவடைந்தன. இதையடுத்து சோதனை ஓட்டத்தை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கூறியது: “தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்தில் சேதமடைந்த அலகு 1 மற்றும் அலகு 2 ஆகியவற்றை முழுமையாக மறுசீரமைப்பதற்கான பணி ஆணை 16.10.2025 அன்று வழங்கப்பட்டு, அன்றே சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர், முதல்வரின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தலின்படி, மறுசீரமைப்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.

இதன் விளைவாக, அலகு 2 கடந்த 28.07.2026 அன்று முதல் வெற்றிகரமாக மின் உற்பத்தியைத் தொடங்கி, முழுத் திறனான 210 மெகாவாட் மின்சாரத்தைத் தமிழக மின் கட்டமைப்புக்கு வழங்கி வருகிறது. அலகு 1-ன் மறுசீரமைப்புப் பணிகளும் தொடர்ந்து துரிதமாக மேற்கொள்ளப்பட்டு, சுமார் 400 கிலோமீட்டர் அளவிலான மின் கேபிள் வழித்தடங்கள் மற்றும் அனைத்து மின் கட்டுப்பாட்டுப் பாதுகாப்புச் சாதனங்களும் புதிதாக நிறுவப்பட்டு சோதனை ஓட்டம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஒரு வார காலத்துக்குள் அலகு 1 மீண்டும் இயக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டு, தனது முழுத் திறனான 210 மெகாவாட் மின்சாரத்தைத் மின் கட்டமைப்புக்கு வழங்கும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து தூத்துக்குடி அனல்மின் நிலைய வளாகத்தில் பசுமை பயணத்தின் தொடர்ச்சியாக 7,450-வது மரக்கன்றை அமைச்சர் நட்டு வைத்தார்.

தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் பி.என். ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ கு.சரவணன், தமிழ்நாடு மின் உற்பத்தி கழக இயக்குநர் (தொழில்நுட்பம்) ஜான் டால்டன், அனல் மின்நிலைய தலைமை பொறியாளர் பிரபாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் முதல் அலகில் சோதனை ஓட்டம்
“முதுமலை புலிகள் காப்பகத்தில் அவுட்சோர்சிங் பணியாளர் நியமன முயற்சியை கைவிடுக” - தினகரன்

X