கிருஷ்ணகிரி பகுதியில் 3.0 ரிக்டர் நில அதிர்வு

மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: ஆட்சியர் தகவல்
கிருஷ்ணகிரி பகுதியில் 3.0 ரிக்டர் நில அதிர்வு
Updated on
1 min read

கிருஷ்ணகிரி/ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில பகுதிகளில் புதன்கிழமை இரவு 3.0 ரிக்டர் நில அதிர்வு உணரப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் யாரும் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என ஆட்சியர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம், பெட்டமுகிலாளம் அருகே கர்த்தக்கல் முனியப்பன் கோயில் பகுதியில் நேற்று இரவு 7.52 மணிக்கு பூமிக்கு அடியில் 10 அடி ஆழத்தில் 3.0 ரிக்டர் அளவில் மிகவும் லேசான அதிர்வு ஏற்பட்டுள்ளது.

நில அதிர்வு ஏற்பட்ட பகுதியில் சுமார் 3 கிலோ மீட்டருக்கு எவ்வித வீடுகளோ, கட்டிடங்கள் இல்லை. மேலும், நில அதிர்வு ஏற்பட்ட பகுதியில் இருந்து கீழ்நோக்கி தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதிகளிலும் லேசான அதிர்வு ஏற்பட்டுள்ளது.

மேலும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆகப் பதிவாகும் நில அதிர்வுகளால் கட்டிடங்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. இது பூமியின் உள்அமைப்பில் ஏற்படும் மிகச் சாதாரணமான ஒரு சிறிய அழுத்த வெளியீடு மட்டுமே. எனவே, பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கூடுதல் அதிகாரப்பூர்வ தகவல்களை மத்திய அரசின் நில அதிர்வு அறிவியல் மைய இணையதளம் www.seismo.gov.in அல்லது BhooKamp செயலி வாயிலாகத் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி பகுதியில் 3.0 ரிக்டர் நில அதிர்வு
மேஜிக் நிகழ்த்துவாரா மெஸ்ஸி? - இங்கிலாந்துடன் நாளை பலப்பரீட்சை | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in