

சென்னை: குத்தம்பாக்கம் பேருந்து முனையம் வரும் ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கட்டப்பட்டு தற்போது இயங்கி வருகின்றது.
தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 90 சதவீத அரசுப் பேருந்துகள் தற்போது கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் நிலையில், ஈசிஆர் வழியாக செல்லும் பேருந்துகள், வேலூர், தருமபுரி போன்ற வட மாவட்டங்கள் மற்றும் பெங்களூருவுக்கு இயக்கப்படும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
இந்நிலையில், கோயம்பேடு மற்றும் பூந்தமல்லி பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் சுமார் ரூ.400 கோடி மதிப்பீட்டில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
24.8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன பேருந்து முனையத்தின் கட்டுமான பணிகள் முடிந்துள்ள நிலையில், மின்சார இணைப்பு மற்றும் வர்ணம் பூசுதல் போன்ற இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பேருந்து முனையம் வரும் ஜுன் மாதம் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது: இந்த முனையத்தில் இருந்து அரசு விரைவுப் பேருந்துகள், விழுப்புரம் மற்றும் சேலம் கோட்டப் பேருந்துகள், கர்நாடக அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
வேலூர், ஓசூர், பெங்களூரு, திருப்பதி மற்றும் திருவனந்தபுரம் போன்ற முக்கிய நகரங்களுக்குச் செல்லும் பயணிகள் இந்த முனையத்தின் மூலம் பெரிதும் பயனடைவார்கள்.
தேசிய நெடுஞ்சாலை உடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள இந்த முனையம், அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் நகருக்குள் நுழையாமல் விரைவாகச் செல்ல வழிவகை செய்கிறது.
மேலும், பூந்தமல்லி பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 6 கி.மீ. தூரத்தில் இந்த பேருந்து முனையம் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.