

சென்னை: வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து 785 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கை: பிப்.27-ம் தேதி, பிப்.28-ம் தேதி மற்றும் மார்ச் 1-ம் தேதி வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (பிப்.27) 310 பேருந்துகளும், நாளை மறுநாள் (பிப்.28) 325 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 55 பேருந்துகளும், நாளை மறுநாள் 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 100 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதவரத்திலிருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் தலா 20 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊரிலிருந்து சென்னை, பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை 5,850 பயணிகளும், சனிக்கிழமை 2,607 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 5,944 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.