

பூங்கா ரயில் நிலையத்தில் மின்சார ரயிலுக்காக காத்திருந்த பயணிகள்
சென்னை: பூங்கா நிலையத்தில் மின்சார ரயில் பழுதாகி நின்றதால், தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் மின்சார ரயில் சேவை நேற்று மாலை ஒரு மணி நேரத்துக்கு மேல் தடைபட்டது. தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரயில் நேற்று மாலை 4.50 மணிக்கு புறப்பட்டது.
இந்த ரயில் பூங்கா நகர் ரயில் நிலையத்தை சுமார் 5.20 மணி அளவில் அடைந்தபோது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு நின்றது. ரயிலில் காற்றழுத்தம் குறைதல் (‘ஏர் லாக்’) ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ரயில்வே பொறியாளர்கள், ஊழியர்கள் விரைந்து வந்து கோளாறை சரிசெய்யும் பணியில் ஏற்பட்டனர். இதற்கிடையே, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில்கள் மாம்பலம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர் உட்பட பல நிலையங்களில் நிறுத்தப்பட்டன.
இதுதவிர, பயணிகள் சிறப்பு ரயிலும், விழுப்புரம்-சென்னை கடற்கரை மெமு ரயிலும் பூங்கா, எழும்பூரில் நிறுத்தப்பட்டன. கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி மின்சார ரயில்கள் வழக்கம்போல இயங்கிய நிலையில், எதிர் மார்க்கத்தில் மட்டும் ரயில்கள் நெடுநேரம் புறப்படாமல் அங்கேயே நின்றதால், பயணிகள் காரணம் தெரியாமல் குழப்பம் அடைந்தனர்.
பலர் ரயில்களில் இருந்து இறங்கி அருகே உள்ள மெட்ரோ நிலையம், பேருந்து நிறுத்தங்களுக்குச் சென்று, அங்கிருந்து மெட்ரோ ரயில், பேருந்துகளில் ஏறிச் சென்றனர். இதற்கிடையே, பூங்கா நிலையத்தில் நின்ற மின்சார ரயிலில் ஏற்பட்ட பழுதை ஒரு மணி நேரம் போராடி ஊழியர்கள் சரிசெய்தனர்.
இதையடுத்து, மாலை 6.25 மணி முதல் தாம்பரம் - கடற்கரை நோக்கி மின்சார ரயில்கள் இயக்கம் சீரானது. மின்சார ரயில் சேவை ஒருமணி நேரத்துக்கு மேல் பாதிக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
இந்த சூழலில், எழும்பூரில் அடுத்தடுத்து ரயில்கள் நின்றதை படமெடுத்த சிலர், ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் எதிர் எதிரே வந்ததாக தகவல்பரப்பினர். வலைதளங்களில் இதுவைரலாக பரவியது. இந்த செய்திகள் தவறானவை அடிப்படை ஆதாரமற்றவை என தெற்கு ரயில்வே மறுத்துள்ளது.