

ஷாஜி புருஷோத்தமன்
சென்னை: மதுபோதையில் காரை ஓட்டியதால் 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மதுபான ஆலை அதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எம்பீ என்ற மதுபான தயாரிப்பு குழுமத்தின் தலைவரான எம்.என்.புருஷோத்தமனின் மகன் ஷாஜி புருஷோத்தமன். இவர் கடந்த 2013 மே 22-ம் தேதி தனது நண்பர்களுடன் மதுபோதையில் சொகுசு கார் ஓட்டியதில், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை பகுதியில் சாலையில் தூங்கிக் கொண்டிருந்த முனிராஜ் என்ற 12 வயது சிறுவன் உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதுதொடர்பாக அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்கு பதிவு செய்து ஷாஜி புருஷோத்தமன் மற்றும் அவரது நண்பர்களான குமார், சையது அன்வர், அனில்ராவ் ஆகியோரை கைது செய்தனர். அனைவரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
பின்னர், இந்த வழக்கில் இருந்து சையது அன்வரை விடுவித்தும், அனில் ராவ் மீதான வழக்கை ரத்து செய்தும் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஷாஜி புருஷோத்தமன், குமார் ஆகியோர் மீதான வழக்கு மட்டும் சென்னை 7-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த ஜூன் 29-ம் தேதி ஷாஜி புருஷோத்தமன் குற்றவாளி என்றும், குமாரை வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பளிக்கப்பட்டது.
அன்று ஷாஜி புருஷோத்தமன் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் தண்டனை விவரம் அறிவிக்கப்படாமல் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சென்னை மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்கேபி தமிழரசி முன்பு ஷாஜி புருஷோத்த
மன் நேற்று சரணடைந்தார். குற்றம் சாட்டப்பட்ட ஷாஜிபுருஷோத்தமனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10,500 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.