

சென்னை: வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் இன்று தொடங்க இருந்த ரயில் சேவை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக சில பணிகளை முடிக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிவுறுத்தியுள்ளதால், இப்பாதையில் ரயில் சேவை தாமதமாகி உள்ளது.
இதனால், பயணிகள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் தடத்தை பரங்கிமலை வரை 5 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்கும் பணி 17 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நிறைவடைந்தது.
இதையடுத்து, இத்தடத்தில் கடந்த ஆண்டு நவ.7, டிச.15 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து சரக்கு ரயில் இயக்கி சோதிக்கப்பட்டன. இது தொடர்பாக, ரயில்வே பாதுகாப்பு ஆணையருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வேளச்சேரி - பரங்கிமலை ரயில் வழித்தடத்தில் மார்ச் 10-ம் தேதி (இன்று முதல்) மின்சார ரயில் சேவை தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே பிப்.25-ம் தேதி அறிவித்தது.
இதையடுத்து, புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தும் பணி நடைபெற்றது. மேலும், இத்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக் குமார் கர்க் கடந்த 5-ம் தேதி ஆய்வு செய்தார்.
தண்டவாள அமைப்பு, மேம்பாலக் கட்டமைப்புகள், மின்சார வழித்தடங்கள், சிக்னல் மற்றும் இன்டர்லாக்கிங் அமைப்புகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை ஆணையர் ஆய்வு செய்தார்.
ஏசி மின்சார ரயில் மூலமாக அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இச்சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, இன்று முதல் திட்டமிட்டப்படி, மின்சார ரயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அறிக்கை வரவில்லை
இந்நிலையில், இன்று தொடங்க இருந்த ரயில் சேவை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தெற்கு ரயில்வே வட்டாரங்கள் கூறும்போது, "ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர், இந்த மார்க்கத்தில் சில பிரச்சினைகளை அடையாளம் கண்டுள்ளார்.
அவற்றை சரிசெய்ய தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், நிபந்தனையுடன் அனுமதி கூட வழங்கவில்லை. அவற்றை முடித்த பிறகே, அனுமதி வழங்கப்படும்" என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: பரங்கிமலை - வேளச்சேரி மார்க்கத்தில் ரயில் சேவை தொடங்குவது குறித்து, தலைமை ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடம் இருந்து அறிக்கை வரவில்லை. பாதுகாப்பு ஆணையர் கடந்த சனிக்கிழமை (7-ம் தேதி) தான் டெல்லிக்கு சென்றார். 9-ம் தேதி (நேற்று) அறிக்கை வரவேண்டும்.
அறிக்கை வர ஓரிரு நாட்கள் ஆகலாம். வந்தபிறகே, ரயில் சேவை தொடங்கும்" என்றனர். எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை சீரமைப்பு பணி நடைபெறுவதால், புறநகர் மின்சார ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது.
இதனால், பயணிகள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பரங்கிமலை -வேளச்சேரி தடத்தில் இன்று ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்த்திருந்த மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.