

சென்னை: சென்னை போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: ஆதம்பாக்கம் மஸ்தான் கோரி சாலை, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சிலை சந்திப்பு அருகே ஆர்.சி.சி. கழிவுநீர் பிரதான குழாய் சேதமடைந்துள்ளது.
இதை சீரமைத்து புதிய கழிவுநீர் குழாய் இணைக்கும் பணிக்காக, சாலையின் நடுவில் பள்ளம் தோண்டப்பட உள்ளது.
இதையொட்டி, வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் இன்று (11-ம் தேதி) முதல் வரும் 15-ம் தேதி வரை 5 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆதம்பாக்கம் கக்கன் நகர் மெயின் ரோட்டில் இருந்து ஆபீசர் காலனி மெயின் ரோடு – மஸ்தான்கோரி சாலை சந்திப்பு வழியாக பரங்கிமலை ரயில் நிலையம் செல்ல அனைத்து வாகனங்களுக்கும் (அரசு பஸ்கள் உள்பட) தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக கக்கன் நகர் மெயின் ரோடு – ஏரிக்கரை சாலை – பிருந்தாவன் நகர் மெயின் ரோடு – பாலாஜி நகர் மெயின் ரோடு வழியாகச் சென்று, எம்.ஆர்.டி.எஸ். சாலையில் இடதுபுறம் திரும்பிச் செல்லலாம்.
பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து என்.ஜி.ஓ. காலனி செல்லும் வாகனங்கள் மேடவாக்கம் மெயின் ரோடு – எம்.ஆர்.டி.எஸ். சாலை வழியாக இடதுபுறம் திரும்ப வேண்டும்.
பின்னர் எம்.ஆர்.டி.எஸ். சாலை – பாலாஜி நகர் மெயின் ரோடு – பிருந்தாவன் நகர் மெயின் ரோடு – ஏரிக்கரை சாலை – கக்கன் நகர் மெயின் ரோடு வழியாக தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடையலாம்.