

ஜீவன் சிங்
சென்னை: தமிழகம், தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள ஜெயின் கோயில்களை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட முகமூடித் திருடன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை யானைக்கவுனி, மின்ட் தெருவில் பிரபலமான ஜெயின் கோயில் உள்ளது.
கடந்த ஆண்டு பிப்.14-ம் தேதி இந்த கோயில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த நபர், சாமி சிலைகளில் அணிவித்திருந்த 10 கிலோ எடை கொண்ட 5 வெள்ளி கிரீடங்கள், சாமி சிலைகளின் நெற்றியில் வைக்கப்பட்டிருந்த 600 கிராம் எடை கொண்ட தங்கப்பட்டைகளை திருடிவிட்டு தப்பினார்.
மறுநாள் காலையில் கோயில் நிர்வாகிகள், இது தொடர்பாக யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இதில் முகமூடி அணிந்து இருட்டில் டார்ச் லைட் அடித்தபடி கோயிலுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்டது மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் உள்ள ஹவாளி பகுதியில் வசித்த ஜீவன் சிங் (60) என்பது தெரிந்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீஸார் அவரை கைது செய்தனர்.
திருட்டு நகைகளை வாங்கியதாக அதே மாநிலம் வாத்வானியைச் சேர்ந்த ராஜ்பவு ரத்தோர் (30) என்பவரையும் கைது செய்தனர். விசாரணையில், ஜீவன் சிங் யானைக்கவுனி ஜெயின் கோயிலில் திருடியதைப்போல், தெலங்கானா மாநிலத்தில் உள்ள 2 ஜெயின் கோயில்கள், கர்நாடகாவில் உள்ள ஒரு ஜெயின் கோயிலும் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
கர்நாடகா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த போதுதான் சென்னையில் உள்ள கோயிலில் கைவரி சையை காட்டியுள்ளார். அதுமட்டும் அல்லாமல் போலீஸ் தன்னை அடையாளம் கண்டு கைது செய்து விடக்கூடாது என்பதற்காக அவர், இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி வந்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் சென்னை மட்டும் அல்லாமல் சேலம், செங்கல்பட்டில் உள்ள ஜெயின் கோயில்களிலும் திருட்டில் ஈடுபட்டுள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.