

கோப்புப்படம்
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில், கடந்த டிச.26-ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த பள்ளிக்கல்வித் துறை மற்றும் காவல் துறையினர் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.
இதையடுத்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், இடைநிலை ஆசிரியர்களுடன் ஜன.14-ம் தேதி நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இதனால் ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆசிரியர்கள் 23-வது நாளாக சென்னை சைதாப்பேட்டையில் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். அதன்பின் ஆசிரியர்களை கைது செய்து அருகே உள்ள மண்டபங்களில் அடைத்து வைத்து மாலையில் விடுவித்தனர். இதேபோல், பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை டிபிஐ வளாகம் அருகில் 10-வதுநாளாக போராட்டம் நடைபெற்றது.
இதற்கிடையே, பொங்கல் விடுமுறை முடிந்து பிறகு பள்ளிகள் மீண்டும் நாளை (ஜன.19) திறக்கப்பட உள்ளன. இதனால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படும் என்பதால் ஆசிரியர்களின் போராட்டத்தை தமிழக அரசு முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென கல்வியாளர்கள், பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.