

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பு முயற்சியில் ஈடுபட்டு வந்த சசிகலா, இறுதியாக அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
இக்கட்சி, இந்த தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. சசிகலா இதுவரை 5 கட்டங்களாக 80 வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடையும் நிலையில் நாளை (ஏப்.7) பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
இது தொடர்பாக கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் சசிகலா, இன்று முதல் 10-ம் தேதி வரை, இக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
அதன்படி நாளை, திருப்பரங்குன்றம், மதுரை மத்தி, திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி தொகுதிகளிலும், 8-ம் தேதி போடி, நிலக்கோட்டை, திண்டுக்கல், மேலூர், தொகுதிகளிலும், 9-ம் தேதி சிவகங்கை, மானாமதுரை, திருச்சுழி, அருப்புக்கோட்டை, சாத்தூர் தொகுதிகளிலும், 10-ம் தேதி சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.