

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை (அக்.6) நடக்கிறது. துணை ராணுவப்படை, போலீஸார் என 1,300 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மங்கலம், தட்டாஞ்சாவடி என இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இடைத்தேர்தல் அட்டவணையை கடந்த மாதம் 7-ம் தேதி அதிகாரபூர்வமாக தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி நாளை (அக்.6) இடைத்தேர்தல் நடக்கிறது.
தட்டாஞ்சாவடி தொகுதியில் அரசியல் கட்சிகள் சார்பில் 6 பேரும், சுயேச்சைகளாக 5 பேரும் மொத்தமாக 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த், காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம், திமுக வேட்பாளர் சேதுசெல்வம், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அ.மு.சலீம் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது.
தொகுதியில் மொத்தம் 26,921 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் 12,575 பேர், பெண் 14,341 பேர், மூன்றாம் பாலினத்தவர் 5 பேர். இதில் 350 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 3 வெளிநாடு வாழ் வாக்காளர்களும் அடங்கும். புதிதாக சேர்க்கப்பட்ட 584 பேருக்கும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவுக்கு பயன்படுத்த தலா 46 வாக்கு பதிவு மற்றும் கட்டுப்பாடு இயந்திரங்கள், 48 விவிபாட் இயந்திரங்கள் என 140 வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை பரிசோதனை முடித்து பலத்த பாதுகாப்புடன் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தன. இதிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் 31 வாக்கு சாவடிகளுக்கும் நேற்று மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.
வாக்குப்பதிவு பணிக்காக அரசு ஊழியர்கள் 148 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 31 வாக்குச்சாவடிகளுக்கு தலைமை வாக்குச்சாவடி அதிகாரிகள், வாக்குச்சாவடி அதிகாரிகள் 1, 2, 3 என பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 23 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 85 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் 67 பேருக்கும் மற்றும் 40 சதவீதத்திற்கு மேலான மாற்றுத்திறனாளிகள் 37 பேருக்கும் சிரமத்தைப் போக்க அவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டது. அதன்படி இந்த வாக்காளர்கள் வீட்டிலிருந்தபடி வாக்களித்துள்ளனர்
வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறும் பொருட்டு இரு தினங்களுக்கு தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிப்பறை, சாய்வு தளம், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் வெயிலில் நிற்காமல் இருக்க நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்து கொள்ள ஒஆர்எஸ் கரைசலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குசாவடிகளுக்கு குழந்தைகளுடன் வர வேண்டாம் என தேர்தல் துறை அறிவுறுத்தியுள்ளது.
நாளை காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு வாக்கு பதிவு நிறைவடைகிறது. தட்டாஞ்சாவடியிலுள்ள 31 வாக்குசாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினருடன் போலீஸார் சேர்ந்து 1,330 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இங்குள்ள மொத்தமுள்ள 31 வாக்குச்சாவடிகளில் கவுண்டம்பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளி பூத், வினோபாநகர் பொய்யாகுளம் கம்யூனிட்டி ஹால் அரங்கு ஆகிய பூத்கள் பதற்றமானவையாகும். இங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெண்களே முழுக்க நிர்வகிக்கும் ‘பிங்க் பூத்’ குளூனி பள்ளியில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பாக்குமுடையான்பட்டு அரசு தொடக்கப் பள்ளியில் இரு வாக்குச்சாவடிகள் மாதிரி வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வினோபாநகர் அம்பேத்கர் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி இளையோர் நிர்வகிக்கும் வாக்குச்சாவடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.