

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு காய்கறிக் கழிவுகள் மூலம் இயற்கை எரு தயாரிப்பு, கணினிப் பயிற்சியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடக்கி வைத்தார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ‘தூய்மையே சேவை’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் இன்று நடைபெற்றது.
துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தூய்மை திட்ட செயல்பாடுகளை தொடங்கி வைக்கும் விதமாக காய்கறிக் கழிவுகள் மூலம் இயற்கை எரு தயாரிப்பு முறையை தொடங்கி வைத்தார். ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ திட்டத்தின் கீழ் மரக்கன்று நட்டு வைத்தார்.
சிறை கைதிகளின் புனர்வாழ்வு செயல்பாடுகளின் கீழ் நடைபெறும் தோட்டப்பயிர் உற்பத்தி, மரம் வளர்ப்பு, கைவினைப் பயிற்சி ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். உற்பத்திப் பொருட்களை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து காணொலி வாயிலான கலந்துரையாடல் அறை, மற்றும் சிறை கைதிகளுக்கான கணினிப் பயிற்சி திட்டம் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார்.
முன்னதாக, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. தலைமைச் செயலரின் சிறப்பு அதிகாரி ராஜீவ் சுக்லா, உள்ளாட்சித் துறை இயக்குனர் ஆதர்ஷ், சிறைத்துறை ஐ.ஜி மோகன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.