எஸ்ஐஆர் படிவம் ஒப்படைக்க நாளை கடைசி நாள்
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்தத்தில், கணக்கீட்டுப் படிவம் ஒப்படைக்க நாளை கடைசி நாளாகும்.
தலைமை தேர்தல் ஆணை யத்தின் வழிகாட்டுதல்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது. இப்பணிகள் டிச.4-ம் தேதி முடிவடைய இருந்த நிலையில், நாளை 11-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 6 கோடியே 40 லட்சத்து 84,624 பேருக்கு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதேபோல், கணக்கீட்டு படிவங்களை பதிவேற்றும் பணி 99.55 சதவீதம் முடிவடைந்துள்ளது. அதாவது 6 கோடியே 38 லட்சத்து 25,877 வாக்காளர்களின் படிவங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்து பெறுதல், பதிவு செய்தல் ஆகிய பணிகள் நாளையுடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிச.16-ம் தேதி வெளியிடப்படும். அன்று முதல், வரும் ஜன 15-ம் தேதி வரை ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம். மேலும், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் அல்லது ஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். அவற்றின் மீது பரிசீலனைகள் நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.14-ம் தேதி வெளியிடப் படுகிறது.
