நவ.3 பெருந்துறையில் நடைபெறவிருந்த முதல்வர் நிகழ்ச்சி இடமாற்றம்

நவ.3 பெருந்துறையில் நடைபெறவிருந்த முதல்வர் நிகழ்ச்சி இடமாற்றம்
Updated on: 
1 min read

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் நாளை (நவ.03) நடைபெறவிருந்த முதல்வர் நிகழ்ச்சி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால்மேட்டில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் அரசு சார்பில் நாளை (நவ.03) நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விழாவில் ஈரோடு, கரூர், திருப்பூர், சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த 4,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,110 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் விஜய் வழங்க இருந்தார். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கொங்கு பொறியியல் கல்லூரியில் ஹெலிபேடு அமைக்கும் பணிகள், பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. தினமும் அமைச்சர்கள், ஆட்சியர் ஆகியோர் நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியை ஆய்வு செய்து வந்தனர். இந்நிலையில் நிகழ்ச்சி நாளை (நவ.03) நடைபெற உள்ள நிலையில், திடீரென நிகழ்ச்சி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: “பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெறவிருந்த முதல்வரின் நிகழ்ச்சி, காஞ்சிக்கோவில் லட்சுமி நாராயணா திருமண மண்டபத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த அவர்கள் உத்தரவிட்டுள்ளனர். ‘ரோடு ஷோ’வில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை” என போலீஸார் கூறியுள்ளனர்.

குழப்பத்தில் அதிகாரிகள்: “முதல்வரின் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல் வெளியான நாள் முதலே, அதுகுறித்த எந்த முழு தகவலும் தெரியாததால் அதிகாரிகள், தவெக-வினர், பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சி இடம் மாற்றம் செய்யப்பட்டதால், அதிகாரிகள் அதிருப்தியில் உள்ளனர். முதல்வர் வருகையையொட்டி 4,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக” அதிகாரிகள் தெரிவித்தனர்.

நவ.3 பெருந்துறையில் நடைபெறவிருந்த முதல்வர் நிகழ்ச்சி இடமாற்றம்
திருச்சி வந்த முதல்வருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்பு

X