

49-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம், ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை தொடங்க உள்ள நிலையில் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. படம்: ம.பிரபு
சென்னை: பபாசியின் 49-வது சென்னை புத்தகக் காட்சியை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜன.8) தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின (பபாசி) தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், செயலர் எஸ்.வயிரவன் ஆகியோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பபாசி சார்பில் 49-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ விளையாட்டு மைதானத்தில் ஜன 8-ம் தேதி (வியாழன்) முதல் ஜன.21 வரை நடைபெற உள்ளது.
இந்த புத்தக காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து கலைஞர்கருணாநிதி பொற்கிழி விருதுகளை வழங்குகிறார். இவ்விழாவில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
புத்தகக் காட்சி தினமும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். தமிழுக்காக 428 அரங்குகள், ஆங்கில அரங்குகள் 256, பொது அரங்குகள் 24 உள்பட மொத்தம் 1,000 அரங்குகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படும்.
ஜன.19-ம் தேதி நடைபெறும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பபாசி விருதுகளை வழங்குகிறார். ஜன.21-ம் தேதி நடைபெறும் நிறைவுநாள் விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கலந்து கொண்டு பதிப்புத் துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்குகிறார்.
வாசகர்களை அதிக எண்ணிக்கையில் புத்தகக் காட்சிக்கு வரவைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஆண்டு புத்தகக்காட்சிக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. புத்தகக் காட்சி வருகை தரும் வாசகர்கள் நுழைவாயிலில் பெயரை பதிவு செய்தால் போதும். அஞ்சல் துறை சார்பில் இரண்டு அரங்குகள் அமைக்கப்படும்.
ஒரு அரங்கில் தபால் துறை சேவைகள் குறித்த விளக்கங்களும் மற்றொரு அரங்கில் ஆதார் அட்டை குறித்த அனைத்து விளக்கங்கள், பார்சல் சேவைகள் செய்து தரப்படும். தமிழக அரசின் மின்சாரத் துறை சார்பில் சூரிய சக்தி மின்சாரம் (சோலார் பவர்) குறித்த தகவல்கள் பகிரப்படும். குழந்தைகளுக்கான இமேஜிங் நிறுவனம் சார்பில் பிரத்யேக அரங்கு அமைக்கப்படும். புத்தகக் காட்சி அரங்கில் ஏடிஎம் இயந்திரங்கள் அமைக்கப்படும்.
15 இடங்களில் டெபிட், கிரெடிட்கார்டுகளை ஸ்வைப்பிங் செய்து கொள்ளும் வசதி இருக்கும். இலவச வைஃபை, கைபேசிகளுக்குத் தேவையான சார்ஜர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஜன.12-ல் பள்ளி மாணவர்கள் 3 ஆயிரம் பேர் பங்கேற்கும் `சென்னை வாசிக்கிறது' என்ற பிரத்யேக நிகழ்ச்சி நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.