

சென்னை: டெல்லியில் நடைபெறும் தேசிய இளையோர் திருவிழாவில் தமிழகத்திலிருந்து 83 இளைஞர்கள் பங்கேற்கின்றனர். சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12-ம் தேதியை முன்னிட்டு, மத்திய அரசு ஆண்டுதோறும் தேசிய இளையோர் திருவிழாவைக் கொண்டாடி வருகிறது.
அதன்படி 29-வது தேசிய இளையோர் திருவிழா டெல்லியில் ஜனவரி 9 முதல் 12-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது.
‘வளர்ந்த இந்தியா-இளம் தலைவர்கள் உரையாடல்' என்ற பெயரில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. திருவிழாவில் பங்கேற்க ‘மை பாரத்' தளம் வழி யாக நடத்தப்பட்ட பல்வேறு கட்டத் தேர்வுகளில், தமிழகத்திலிருந்து சுமார் 4.20 லட்சம் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களில் கட்டுரை, பேச்சு, கலைப் போட்டிகள் மற்றும் டிராக் சாம்பியன்ஷிப் அடிப்படையில் 83 சிறந்த இளைஞர்கள் இறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜன.12-ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று இளைஞர்களுடன் கலந்துரையாடுகிறார்.
தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.