

திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிடவிருக்கும் அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று (ஏப்.2) திருச்சியில் வேட்புமனு தாக்கல் செய்து, காந்தி மார்க்கெட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இதற்காக அவருக்கு காவல்துறை சார்பில் 51 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இதில், பெரம்பூர் தொகுதியில் கடந்த 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட பாலக்கரை பகுதியில் உள்ள மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேசபாண்டியிடம் இன்று(ஏப்.2) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
தொடர்ந்து காந்தி மார்க்கெட் பகுதியில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி தவெக நிர்வாகிகள் செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் நேற்று திருச்சி காந்தி மார்க்கெட் காவல்நிலையத்தில் மனு அளித்தனர்.
அதன் பின்னர், பிரச்சாரம் செய்யும் இடத்தை பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து, செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது: ஒரு அரசியல் கட்சித் தலைவர் 2 தொகுதிகளில் போட்டியிடுவது வாடிக்கையான ஒன்று.
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவும் 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். அப்படி போட்டியிட ஜனநாயகத்தில் அனைவருக்கும் உரிமை உள்ளது.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்ய 51 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். உரிய பாதுகாப்பு அளிப்பதாக காவல் துறையினரும் தெரிவித்தனர் என்றார்.