

திருச்சி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (பிப்.13) இரவு திருச்சி வருகிறார். திருச்சியில் இன்று இரவு நடைபெறும் மையக் குழுக் கூட்டத்தில் பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சார யுக்திகள் மற்றும் வியூகங்கள் குறித்து அவர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
டெல்லியில் இருந்து இன்று மாலை தனி விமானத்தில் புறப்பட்டு, இரவு 9 மணிக்கு திருச்சி விமான நிலையம் வரும் அமித் ஷா, அங்கிருந்து கார் மூலம் ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள தனியார் ஹோட்டலில் தங்குகிறார்.
பின்னர், அங்கு இரவு 10 மணிக்கு நடைபெறும் மையக்குழுக் கூட்டத்தில் பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் தமிழக அரசியல் நிலவரம், தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சார யுக்திகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடுகிறார். மேலும், தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வருவது குறித்து இறுதி முடிவு எடுக்க இருப்பதாகவும் தெரிகிறது.
இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக மேலிடப் பார்வையாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி மற்றும் முன்னாள் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், அண்ணாமலை, தமிழிசை, வானதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
காரைக்கால் செல்கிறார்... பின்னர், நாளை காலை 10.30 மணிக்கு காரில் விமான நிலையம் செல்லும் அமித் ஷா,அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் செல்கிறார். அங்கு நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் அவர், பின்னர் புதுச்சேரி மாநில பூத் கமிட்டி நிர்வாகிகளுடன், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் வரும் அமித்ஷா, தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். இதையொட்டி திருச்சி மாநகரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலை யம் மற்றும் தனியார் ஹோட்டலில் பாதுகாப்புத் துறை ஒருங்கிணைப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது.