

புதுச்சேரிக்கு இன்று பிரதமர் மோடி வருவதையொட்டி, அணணா சாலையின் இருபுறமும் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கட்சிக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன. | படம்: எம்.சாம்ராஜ் |
புதுச்சேரி: தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி இன்று புதுச்சேரியில் நடைபெறும் ‘ரோடு ஷோ’ நிகழ்வில் பங்கேற்கிறார். பிரதமர் வருகையையொட்டி புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரிக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது. 7-ம் தேதியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. நாட்கள் குறைவாக இருப்பதால் முக்கியத் தலைவர்கள் அடுத்தடுத்து பிரச்சாரத்துக்கு வருகை தர உள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை தருகிறார். அவர் ‘ரோடு ஷோ’வில் பங்கேற்கிறார்.
இன்று மாலை 4 மணி அளவில் புதுச்சேரி அஜந்தா சிக்னலில் இருந்து ராஜா தியேட்டர் சிக்னல் வரை இந்த ‘ரோடு ஷோ’ நடைபெறுகிறது.
இதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்து, அங்கிருந்து தனி விமானத்தில் புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையம் வருகிறார்.
விமான நிலையத்தில் இருந்து ‘ரோடு ஷோ’ நடக்கும் பகுதி வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. பிரதமரின் பாதுகாப்பு பிரிவினர் புதுச்சேரி காவல்துறையினருடன் இணைந்து ‘ரோடு ஷோ’ நடைபெறும் சாலையில் விரிவாக ஆய்வு செய்தனர்.
மத்திய பாதுகாப்பு படையினரும் பிரதமர் வரும் சாலை, குறுக்கு சாலை என அனைத்து பகுதிகளிலும் விரிவாக ஆய்வு செய்து, பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். பிரதமரின் ‘ரோடு ஷோ’வை முன்னிட்டு புதுச்சேரி நகரின் முக்கிய பகுதிகளில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
“ஏறக்குறைய 30 ஆயிரம் பேர் இந்த ‘ரோடு ஷோ’வை பார்வையிட சாலையின் இருபுறமும் திரள்வார்கள்” என்று புதுச்சேரி பாஜக தலைவர் வி.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் இன்றைய வருகையையொட்டி புதுச்சேரி பாஜகவினர் பல இடங்களில் கட்சிக்கொடி, தோரணங்களை கட்டி ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
பிரதமர் ரோடு ஷோ நடைபெறும் பகுதிகளில் நேற்று மாலை முதலே தடுப்புகள் வைக்கப்பட்டு முற்றிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் வருகையால், 1,500 உள்ளூர் போலீஸார் மற்றும் 20 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.