

சேலம்: லாரிகளுக்கான தகுதிச்சான்றிதழ் புதுப்பிப்புக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.
இது தொடர்பாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் தனராஜ் சேலத்தில் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம், அனைத்து வாகனங்களுக்கும் தகுதிச் சான்றிதழ் கட்டணத்தை டிச. 17-ல் உயர்த்தியது.
அதன்படி, லாரிகளுக்கான தகுதிச் சான்றிதழ் புதுப்பிப்புக் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.850-ல் தொடங்கி ரூ.28,200 வரை உயர்ந்துள்ளது. வாகன பரிசோதனை மையங்களில் சோதனை செய்யப்படும்போது, இந்தக் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாகன பரிசோதனை மையங்களே இல்லை என்ற போதிலும், கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. லாரிகளுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணத்தை குறைக்க வேண்டும், அதுவரை மத்திய அரசின் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை கோரிக்கை ஏற்கப்படவில்லை. கட்டண உயர்வால் தகுதிச் சான்றிதழ் பெற முடியாமல் ஒரு லட்சம் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் உள்ள லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், முதல்கட்டமாக டெல்டா மாவட்டங்களில் இன்று (பிப். 16) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும்... நாமக்கல்லில் நாளை (பிப். 17) நடைபெறும் சம்மேளன செயற்குழுக் கூட்டத்தில், எங்களது கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.