வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்: மே 10 முதல் கணக்கிட உத்தரவு

வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்: மே 10 முதல் கணக்கிட உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை அனைத்து வீட்டு மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. 101 - 500 யூனிட் வரை பயன்படுத்தினால் 100 யூனிட்கள் கழிக்கப்பட்டு மீதமுள்ள யூனிட்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், சட்டப் பேரவை தேர்தல் வாக்குறுதியில், 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார்.

அதன்பின்னர், முதல்வராக பதவியேற்ற ஜோசப் விஜய், தமிழ்நாடு முழுவதும் 2 மாதங்களுக்கு 500 யூனிட்வரை மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார். இந்த 200 யூனிட் இலவச மின்சார திட்டம் மே 10-ம் தேதியில் இருந்து கணக்கிடப்படும். 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தினால் 100 யூனிட் இலவசம் என்ற பழைய திட்டமே தொடரும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து மின்சார கணக்கீட்டு மென்பொருளில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுக்கும் மின் வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதுகுறித்து, அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின்வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘‘கட்டண மென்பொருளில் செயல்படுத்தப்பட்டுள்ள புதிய கூடுதல் மானிய விதிமுறை குறித்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு தெரிவிக்க பொறியாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.

2 மாதங்களுக்கு ஒருமுறை 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மே 10 முதல் 200 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். 500 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர், 100 யூனிட்கள் வரையிலான இலவச மின்சாரப்பலனைப் பெறுவார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்: மே 10 முதல் கணக்கிட உத்தரவு
அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கீடு: முதல்வரிடம் காவல், உள்துறை, மகளிர் நலன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in