

கோப்புப்படம்
சென்னை: தமிழகத்தில் தொடர் மின் தடை ஏற்படும் இடங்களில் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண புதிய திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகளுக்கு மின் வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் அவற்றை நிரந்தரமாக தடுக்க ‘ரிப்பீட் டிரிப்பிங் எலிமினேஷன் புரோகிராம் (Repeat Tripping Elimination Programme - RTEP) என்ற புதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்துமாறு தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஜெ. ராதாகிருஷ்ணன் அனைத்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சில துணை மின் நிலையங்கள், மின் வழித்தடங்கள் மற்றும் மின் வலையமைப்புகளில் தொடர்ந்து மீண்டும் மீண்டும் மின் தடை ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இத்தகைய இடங்களை கண்டறிந்து, அதன் மூல காரணத்தை பகுப்பாய்வு செய்து அறிவியல் ரீதியாக ஆய்வுகளை மேற்கொண்டு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக மாநில அளவிலான நிபுணர் குழு மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுவும் செயல்படும்.
மேலும், 85 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைவடைந்துள்ள புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் மின் கட்டமைப்பு பணிகளை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வாரந்தோறும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் மின் வலையமைப்பின் நம்பகத்தன்மை அதிகரித்து, மீண்டும் மீண்டும் ஏற்படும் மின் தடைகள் குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.