அளவுக்கு அதிகமான இணைய பயன்பாடு: கரோனா ஊரடங்கில் திசைமாறும் இளைஞர்கள்: பெற்றோருக்கு மன நல ஆலோசகர் எச்சரிக்கை

பி.ராஜா சவுந்தரபாண்டியன்
பி.ராஜா சவுந்தரபாண்டியன்
Updated on
2 min read

இந்தியாவில் கரோனா ஊரடங்கில் இணைய பயன்பாடு 13 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தொலைத் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துஉள்ளது. இதற்குக் காரணம் ஆன்லைன் வகுப்பு, சமூக வலைதளங்கள் மற்றும் படம் பார்ப்பது என்று கூறப்படுகிறது.

அதே சமயம் கரோனா ஊரடங்கில் மொபைல் போன்களில் மூழ்கிக் கிடக்கும் மாணவர்கள், இளைஞர்கள் பல்வேறு மன அழுத்தங்களில் சிக்கியுள்ளனர். அதற்காக அவர்கள் ஆலோசனை பெற வருவதாக மதுரை மன நல ஆலோசகர் பி.ராஜா சவுந்தரபாண்டியன் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:

மொபைல் போனின் அபரிமிதமான வளர்ச்சியால் பல இளைஞர்கள் மோசமான பாதையை நோக்கி பயணிக்கிறார்கள். கரோனா ஊரடங்கில் ஆபாசப் படம் பார்ப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் கல்லூரி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உதாரணத்துக்கு ஒரு உண்மை சம்பவத்தைக் கூற விரும்புகிறேன். பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு படிக்கும் நண்பர்கள் இருவர் என்னை சந்தித்தனர். இவர்கள் மன நல ஆலோசனை பெற வந்தார்கள்.

`மனதில் ஒரு குழப்பம், மன அழுத்தம் இருப்பதாகவும், அளவுக்கு அதிகமான ஆபாச படங்கள் பார்த்து தாங்கள் தவறான பாதையில் செல்வதாகவும் கூறினர். அதில் இருந்து எங்களால் மீள முடியவில்லை' என்றனர்.

அந்த மாதிரியான படங்களைத் தவிர்த்தாலே இப்பிரச்சினைகள் வராது என்று தெரிவித்தேன்.

அதற்கு அவர்கள் கூறியது, `முன்பெல்லாம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு டேட்டாவை பயன்படுத்துவோம். ஏனெனில் அதன்விலை அதிகம், வேகம் குறைவு. இப்போது குறைந்த விலைக்கு அதிகமான டேட்டா கிடைப்பதாலும், அதிக சுதந்திரமும், தனிமையும் இருப்பதாலும் என்ன செய்வது என்று தெரியாமல் எங்கள் மனம் இதைச் சுற்றியே வருகிறது' என்றனர்.

அவர்கள் கூறிய இன்னொரு அதிர்ச்சித் தகவல், `தங்கள் நண்பர்கள் பெரும்பாலானோர் இந்த இணையதளங்களையே நாடுகிறார்கள். கடந்த ஒரு வருடமாக தினமும் 4 முதல் 6 மணி நேரம் இது போன்ற படங்களை மொபைல்போனில் பார்க்க செலவிடுகிறோம்' என்றனர்.

ஆபாசப் படங்களைப் பார்ப்பதன் மூலம் ஏற்பட்ட தவறான பழக்கத்தால் தங்கள் ஆண்மை சக்தியை இழந்ததாக நினைத்து பல சித்த மருத்துவர்களை சந்தித்து விசேஷ மருந்துகளை வாங்கி பல ஆயிரங்களை பெற்றோருக்குத் தெரியாமல் செலவழித்ததாகக் கூறினர். இவர்களது நண்பர்களின் வட்டாரத்தில் 5 பேருக்கு மேல் சித்த மருந்துகளை சாப்பிட்டு வருகிறார்கள் என்றும், இவர்கள் அனைவருக்கும் வயது 22-க்கும் குறைவுதான் என்றும் கூறினர்.

இவர்கள் மனதளவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்தது. இந்த பிரச்சினை ஒரு குழப்பத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி, அவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனம் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். இவர்கள் முறையான சிகிச்சை பெற்று தங்களது பழைய வாழ்க்கைக்குத் தற்போது திரும்பியுள்ளனர்.

அவர்கள் கூறிய ஒரே விஷயம், `அளவுக்கு அதிகமாக கிடைத்த இந்த டேட்டாவால் எங்கள் வாழ்க்கையை மாற்றி விட்டது' என்று தான். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை என்ன செய்கிறார்கள் என்று கண்காணிக்க வேண்டும். இணையத்தை பயன்படுத்துவதை எவ்வாறு என பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in