

புதுக்கோட்டை: தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.4 ஆயிரமாக உயர வாய்ப்புள்ளதாகவும், இதுதொடர்பாக வரும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ஜெ.முகமது பர்வேஸ் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் அரசுத் துறைகள் சார்பில் 721 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஆட்சியர் எம்.அருணா தலைமை வகித்தார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெ.முகமது பர்வேஸ் தெரிவித்ததாவது: தமிழகத்தில் தங்கியுள்ள பிற மாநில தொழிலாளர்களின் விவரங்கள் அரசிடம் உள்ளன. மாவட்டம்தோறும் அதிகாரிகளும் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
சிவகாசி பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் உரிய காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதனடிப்படையில், வேலையில்லா பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்பு உள்ளது.
மேலும், தேயிலைத் தோட்ட நல வாரிய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்குவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.