

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் நடைபெறும் மாணவர் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
எஸ்ஆர்எம் பல்கலைக்கழக நிகழ்வில் பங்கேற்ற அவர் கூறியது: “நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக டெல்லியில் நடைபெறும் மாணவர் போராட்டத்துக்கு எங்களின் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். அதற்கு ஒட்டுமொத்த தமிழகமும், எங்கள் முதல்வரும் துணை நிற்கிறோம்.
இன்றைக்குதான் டெல்லியில் இருந்து நீட் தேர்வுக்கு எதிரான போராட்ட குரல் ஒலிக்கிறது. ஆனால், சகோதரி அனிதாவில் இருந்து எண்ணற்ற சகோதர, சகோதரிகளை தமிழகம் இழந்திருக்கிறது.
நீட் விவகாரத்தில் டெல்லியின் குரலுக்கும் தமிழகத்தின் குரலுக்கும் வித்தியாசம் உண்டு. தமிழக முதல்வர், அரசு, தவெக, தமிழக மக்கள் என எல்லோரும் ஒருமித்த குரலில் நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக நீக்க வேண்டும் என்பதுதான். அதில் அரசியல் ரீதியாகவும் சரி, தனியாகவும் சரி, நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
நீட் தேர்வு இல்லாமலேயே திறன்மிக்க மருத்துவர்களை தமிழகம் உருவாக்கி உள்ளது. சமூக நீதியின் அடிப்படையில் அதை செய்தோம். நீட் எதிர்ப்பு நிலைப்பாடு வெறும் அரசியல் காரணங்களுக்கானது அல்ல. எளிய பின்புலம் கொண்ட மாணவர்களால் நீட் தேர்வு பயிற்சி வகுப்புக்கான கட்டணத்தை செலுத்த முடியாது.
ஆட்சியில் உள்ள பாஜக அரசு, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றதை போல நாடாளுமன்றத்தில் இந்த நீட் தேர்வை வாபஸ் பெறப்படும். அது உறுதியாக நடைபெறும். அதற்கு தமிழகத்தின் குரல் முக்கிய குரலாக இருக்கும்” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு கண்டனம் தெரிவித்தும், இந்த முறைகேடுகளுக்கு தார்மிகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 28-ம் தேதி போராட்டத்தை தொடங்கியது.
கடந்த 20-ம் தேதி சிஜேபி கட்சி சார்பில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களை கலைக்க டெல்லி போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதில் சிலர் காயமடைந்தனர். மேலும், மாணவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர். இதேபோல, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள், மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.