

கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார். உடன், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன்
கோவை: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சுதந்திரத்துக்கு பிறகு தமிழகத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு நடந்துள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தனியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று கோவை வந்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டபேரவைத் தேர்தலில் 4.93 கோடி வாக்காளர்கள், வாக்களித்து புதிய சாதனை படைத்துள்ளனர். சுதந்திரத்துக்கு பிறகு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளில் இது அதிகபட்சம். இதற்காக அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி. 86 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
தென்னிந்தியாவின் அதிவேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக கோவை உள்ளது. உலகத்தரம் வாய்ந்த கல்வி முறை, ஜவுளித் தொழில் மற்றும் பொறியியல் சிறப்புகளுடன் கூடிய நகரமாக உள்ளது. தமிழ்நாட்டு மக்களும், குறிப்பாக கோவை மக்களும், அமைதியான மேற்குத் தொடர்ச்சி மலைகளையும், இப்பகுதியின் வளமான ஆன்மிக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தையும் குறித்து பெருமை கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.