“அமித் ஷாவின் ‘ஸ்லீப்பர் செல்’தான் தவெக!” - அமைச்சர் ரகுபதி கருத்து

“அமித் ஷாவின் ‘ஸ்லீப்பர் செல்’தான் தவெக!” - அமைச்சர் ரகுபதி கருத்து
Updated on
1 min read

புதுக்கோட்டை: “தவெக ஒரு விளம்பரக் கட்சி. பாஜகவின் சி-டீம், அமித் ஷாவின் ஸ்லீப்பர் செல்” என்று திமுக அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

அவர் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருச்சியில் நடைபெற்றது திமுக நிர்வாகிகள் கூட்டம்தான். அதில், 10 லட்சம் பேர் வரை கலந்துகொண்டனர். தேர்தலில் எத்தனை அணிகள் களம் கண்டாலும், திமுகவின் அணி பலமானதாகவும், மக்களுக்கு நன்மை செய்கிற அணியாகவும் இருக்கும்.

அதிமுகவின் பழனிசாமி ஆட்சியில் நடக்காத கொடுமைகளா தற்போது நடக்கின்றன? இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகம் எப்படி இருக்கிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும். காவல் துறையினர் நல்ல முறையில் பணியாற்றி வருகின்றனர். ஏதாவது ஓர் அசம்பாவிதம் நடந்தால், அதைவைத்து ஒட்டுமொத்த காவல் துறையை பொறுப்பாக்க முடியாது. அதற்காக நாங்கள் காவல் துறைக்கு வக்காலத்து வாங்கவில்லை. சில அசம்பாவிதங்கள் மூலமாகவும் காவல் நிலைய மரணம் நடக்கிறது. ஆனால், பழனிசாமி ஆட்சியில் நடந்ததைப்போல இப்போது இல்லை.

தவெக தலைவர் விஜய்யை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அவர் அறியாமலும், தெரியாமலும், புரியாமலும் தேர்தல் வாக்குறுதிகள் என்ற பெயரில் பேசி வருகிறார். தவெக மாற்றுக் கட்சியும் இல்லை. ஒற்றைக் கட்சியும் இல்லை. அது ஒரு விளம்பரக் கட்சி. பாஜகவின் சி-டீம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஸ்லீப்பர் செல். இதைத்தான் தொடக்கத்தில் இருந்து கூறி வருகிறேன்” என்றார்.

“அமித் ஷாவின் ‘ஸ்லீப்பர் செல்’தான் தவெக!” - அமைச்சர் ரகுபதி கருத்து
இந்தியாவில் ஏஐ ஏற்படுத்தக் கூடிய தாக்கம் என்ன? - ஸ்ரீதர் வேம்பு விவரிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in