

புதுடெல்லி: காவிரியில் வினாடிக்கு 21,413 கன அடி வீதம் நீர் திறக்கவும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 36.65 டி.எம்.சி நீர் கிடைப்பதை உறுதி செய்யக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கடந்த 11-ம் தேதி, தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவிட்டிருந்ததை ஏற்க முடியாது என கூறியுள்ளது.
மேலும், கர்நாடக அணைகளில் 77.35 டி.எம்.சி நீர் இருப்பு உள்ள நிலையில், விகிதாச்சார முறைப்படி கணக்கிட்டால் தமிழகத்துக்கு ஆகஸ்ட் 12-ம் தேதி வரையில் 31.74 டி.எம்.சி நீர் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் 10.38 டி.எம்.சி நீர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதில் 21.35 டி.எம்.சி நீர் நிலுவையில் உள்ளது.
மேலும் ஆகஸ்ட் 12 முதல் 31-ம் தேதி வரையில் 15.28 டி.எம்.சி நீர் வழங்க வேண்டும். இவ்வாறு மொத்தம் 36.65 டி.எம்.சி நீர் தமிழகத்துக்கு வழங்க வேண்டியது உள்ளது. ஆனால், கர்நாடக அணைகளில் போதிய நீர் இருந்த போதிலும், கள யதார்த்தத்தை கணக்கில் கொள்ளாமல் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவானது, வறட்சி காலத்தில் அல்லது நீர் பற்றாக்குறை ஆண்டின் போது அணைகளில் இருக்கும் நீரை கணக்கிட்டு விகிதாச்சார அடிப்படையில் வழங்கும் முறைக்கு முற்றிலும் எதிரானதாகும்.
எனவே, ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையிலான காலகட்டத்துக்கு விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்துக்கு வினாடிக்கு 21,413 கன அடி வீதம் நீரை திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
லட்சக்கணக்கான விவசாயிகள்: மேலும், ஆகஸ்ட் 12-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் கர்நாடகம் வழங்க வேண்டிய நீரை முழுமையாக திறந்துவிட்டிருந்தால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 டி.எம்.சி. அளவுக்கு உயர்ந்திருக்கும்.
குறுவை சாகுபடிக்காக லட்சக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், இதற்கு மேல் தாமதிக்காமல் தமிழகத்துக்கு விகிதாச்சார அடிப்படையில் கிடைக்க வேண்டிய நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதி செய்ய வேண்டு மென்றும் தமிழக அரசு தனது கூடுதல் மனுவில் வலியுறுத்தி உள்ளது.