

சென்னையில் நேற்று நடைபெற்ற வெற்றித் தமிழ்நாடு மாநாட்டில், ரூ.4,476 கோடி முதலீடு மற்றும் 5,074 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் எல் அண்ட் டி, சிமென்ட்ஸ் உள்ளிட்ட 8 நிறுவனங்களின் திட்டங்களுக்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார்.
சென்னை: தமிழக அரசின், ‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு-2026’ சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கிய முதல்வர் விஜய், ரூ.67,452 கோடிக்கு 97 முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.
மாநாட்டில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தனது வரவேற்புரையில் பேசியதாவது: தமிழகத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது எங்கள் இலக்கு. ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களிலேயே ரூ.1 லட்சம் கோடிக்கும் மேலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளன.
இதன்மூலம் 1.20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் 21 நாட்களுக்குள் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கீர்த்தனா பேசினார்.
இந்த மாநாட்டில் முதல்வர் விஜய் முன்னிலையில், ரூ.67,452 கோடி மதிப்பிலான 97 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் ஒரு லட்சத்து 6,998 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மாநாட்டுக்கு முன் செய்யப்பட்ட ஒப்பந்தங்களையும் சேர்த்து, தவெக பொறுப்பேற்ற முதல் 100 நாட்களுக்குள் ஒட்டு மொத்தமாக ரூ.1,02,514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, ஒரு லட்சத்து 21,788 பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
விண்வெளி முதல்... இந்தியாவின் முதல் தனியார் விண்வெளி நிறுவனங்களான ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ மற்றும் ‘அக்னிகுல் காஸ்மோஸ்’ ஆகிய நிறுவனங்கள் தூத்துக்குடியில் ரூ.650 கோடியில் ஏவுகலன் தயாரிப்பு மற்றும் சோதனை மையங்களை அமைக்கின்றன.
மின்சார இரு சக்கர வாகன உற்பத்திக்காக அல்ட்ரா வயலட் நிறுவனம் கிருஷ்ணகிரியில் ரூ.779 கோடியிலும், செமி கண்டக்டர் சர்வர் உற்பத்திக்காக ‘சூப்பர் மைக்ரோ’ நிறுவனம் சென்னையில் ரூ.477 கோடியிலும், ஷைலி இன்ஜினீயரிங் நிறுவனம் ரூ.500 கோடியிலும் ஆலைகள் அமைக்கின்றன.
காஞ்சிபுரத்தில் ஜேகே டயர் நிறுவனம் ரூ.5,143 கோடியில் 3,510 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. மேலும், ஜெர்மனியின் பிட்சர் நிறுவனம் ரூ.300 கோடியில் காஞ்சிபுரத்தில் உற்பத்தி ஆலையை அமைக்கவுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆவிட் குழுமம் ரூ.7,000 கோடியில் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் முதலீடு மேற்கொள்ளவுள்ளது. ஜெர்மனியின் டைம்லர் நிறுவனம் ஒரகடம் சிப்காட்டில் உள்ள உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மையத்தை ரூ.4,000 கோடியில் விரிவாக்கம் செய்ய உள்ளது.
மாநாட்டில், ரூ.4,476 கோடி முதலீடு மற்றும் 5,074 பேருக்கு வேலை அளிக்கும் எல் அண்ட் டி, ஸ்ரீ சிமென்ட்ஸ் உள்ளிட்ட 8 நிறுவனங்களின் திட்டங்களுக்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார். அதேபோல், விக்ரம் சோலார் உள்ளிட்ட 5 நிறுவனங்களின் உற்பத்தித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரத்தில் முதல் முறை: தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய ராமநாதபுரத்தில் முதல் முறையாக கோத்தாரி குழுமம் சார்பில் ரூ.1,000 கோடி முதலீட்டில் மாபெரும் காலணி உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. டைட்டன் நிறுவனம் ஓசூரில் ரூ.1,000 கோடியில் புதிய ஆலையை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் 1,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சர்வதேச கூட்டாண்மை: வர்த்தகம், இணையப் பாதுகாப்பு, செமி கண்டக்டர் திறன் மேம்பாடு ஆகிய துறைகளுக்காகக் கஜகஸ்தான், நியூசிலாந்து மற்றும் ரஷ்யாவின் ‘ஸ்பெர்பேங்க்’ வங்கியுடன் நிறுவன ரீதியான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. வால்மார்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழக தயாரிப்புகளைச் சர்வதேச சந்தைக்குக் கொண்டு செல்லும் திட்டமும், ‘போஷ்’ நிறுவனத்துடன் இணைந்து 10,000 மாணவர்களுக்கு இணையப் பாதுகாப்புப் பயிற்சி அளிக்கும் திட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.