

சென்னை: சென்னை மாநகராட்சியில் 24,264 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் நேரடியாக மாநகராட்சியின் கீழ் பணியாற்றாமல், மாநகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை சேவை வழங்கும் தனியார் நிறுவனத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கான ஊதியம் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சியர் நிர்ணயித்த ஊதியத்தை வழங்க வலியுறுத்தி ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு பணி நேரத்தில் 3 வேளையும் உணவு இலவசமாக வழங்கப்படும் என்று அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து, அத்திட்டத்தை தொடங்கிவைத்தார்.
இதற்கிடையில் செப்டம்பர் மாத தொடக்கத்தில் தூய்மை பணியாளர்கள், பணி நிரந்தரம் மற்றும் ஆட்சியர் நிர்ணயித்த ஊதியம் வழங்க வலியுறுத்தி, ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் அவர்களிடம் அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது, மாநகராட்சி வழங்கும் உணவு தரமாக இல்லை, உணவுக்குப் பதிலாக உணவுப்படி வழங்க வேண்டும் என்று தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொள்வதாக அமைச்சர்கள் அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.50 மதிப்பில் உணவு வழங்கப்படுகிறது.
அதை உணவுப்படியாக வழங்க அனுமதியும், அதற்கு ஆகும் செலவினமான ரூ.44.28 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கவும் அரசுக்கு கருத்துரு அனுப்பி இருந்தது. இதை கவனமாக பரிசீலித்த அரசு, தூய்மைப் பணியாளர்களுக்கு, அவர்கள் பணிக்கு வரும் நாளை கணக்கிட்டு நாளொன்றுக்கு ரூ.50 உணவுப்படியாக வழங்கவும், அதற்கு ஆகும் ரூ.44.28 கோடியை, மாநகராட்சி நிதியிலிருந்து செலவிடவும் அனுமதி அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.