

சேலம் மாவட்டம் வைகுந்தம் அருகே மாற்றுக்கட்சியினர் பாமகவில் இணையும் விழா நேற்று நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி பேசினார்.
சேலம்: மேட்டூர் அணைக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாததால் தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள ரூ.1,000 கோடி இழப்பை கர்நாடக அரசு தர வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பாமகவில் இணையும் விழா நடந்தது. இதில் அன்புமணி பேசியதாவது: காவிரி பிரச்சினை, மேகேதாட்டு பிரச்சினைக்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்ட வேண்டும். மேட்டூர் அணைக்கு கடந்த மூன்று மாதத்தில் 70 டிஎம்சி தண்ணீர் வந்திருக்க வேண்டும். ஆனால், 7 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்திருக்கிறது.
ஜூன் 12-ல் நீர் திறக்காததால் தமிழக விவசாயிகளுக்கு ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இழப்பீடாக கர்நாடக அரசு ரூ.1,000 கோடி தர வேண்டும் என விவசாய சங்கங்கள் மூலம் தமிழக அரச உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட வேண்டும்.
திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்திருக்கிறது. இதில் நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியும் உயர்த்த விடாமல் தடுக்கிறார்கள். வரும் 2036-ம் ஆண்டு தமிழகத்தில் பாமக ஆட்சி உறுதியாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.