

பட்டுக்கோட்டை: தவெக அரசு அமைந்ததில் இருந்து இந்த அரசால் அதிகம் பாதிக்கப்பட்டது விவசாயப் பெருங்குடி மக்கள்தான் என்று உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் திமுக பிரமுகர் வி.கே.வெங்கடேசனின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு, திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர், “கடந்த சில மாதங்களாகவே தஞ்சாவூர் மாவட்டத்துக்கு நான் அடிக்கடி வந்துகொண்டிருக்கிறேன். கடந்த மூன்று மாதங்களில், நான்கு முறை வருகை தந்துள்ளேன். நான் வரவில்லை என்றாலும் இந்த அரசு என்னைக் கைது செய்து அவர்களே தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அழைத்து வருகிறார்கள்.
இரண்டு வாரங்களுக்குள் முன்று முறை வந்துவிட்டேன். கடந்த 3-ஆம் தேதி என்ன நடந்தது என்பதை, நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தமிழ்நாட்டில் எங்கு பேசினாலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் பேசும்போது மிகவும் கவனமாகப் பேச வேண்டும். நாம் பேசவில்லை என்றாலும், கீழே இருந்து பேசி நம்மை மாட்டிவிட்டுவிடுவார்கள்.
கடந்த 3-ஆம் தேதி, தஞ்சையில் விவசாயிகளுக்கு ஆதரவாக, அவர்களின் கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினோம். எனது தலைமையில் போராட்டம் நடந்தது. நமது கூட்டணிக் கட்சித் தலைவர்களும் விவசாயிகள் சங்கங்களைச் சார்ந்தவர்களும் அதில் கலந்துகொண்டார்கள்.
நான் தலைமை தாங்கி கடைசியாகப் பேசினேன். கிட்டத்தட்ட 22 நிமிடம் பேசினேன். காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று சொன்னேன். அதுமட்டும் சொல்லவில்லை. இன்னும் நிறைய பேசியிருக்கிறேன். டம்மி முதல்வர் என்றேன். ஒரு கேடுகெட்ட அரசாங்கம் அமைந்திருக்கிறது. ஒரு வெட்கங்கெட்ட முதல்வர் தமிழ்நாட்டுக்கு அமைந்திருக்கிறார் என்று சொன்னேன். தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்களே, அதையெல்லாம் செயல்படுத்துவதற்கு உங்களுக்கு வக்கில்லை என்றும் சொன்னேன்.
அதற்கெல்லாம், அவர்களுக்கு கோபம் வரவில்லை. காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று சொன்னதும், கோபம் வந்துவிட்டது. அதற்காக, என்னை இரவோடு இரவாக தஞ்சாவூரில் இருந்து காவல்துறையினரை அனுப்பி என்னைக் கைது செய்தார்கள்.
காவல்துறையினர் என்னை கைது செய்து, தஞ்சாவூருக்கு அழைத்து வருகிறார்கள் என்று தெரிந்தவுடன், டெல்டாவில் இருக்கின்ற அனைத்து உடன்பிறப்புகளும் தஞ்சையில் ஒன்று கூடிவிட்டீர்கள். அதனால், தஞ்சாவூர் சென்றால் நிச்சயம் நம்மால் சமாளிக்க முடியாது என்று, காவல்துறையினர் வண்டியை செங்கிபட்டி காவல் நிலையத்துக்குத் திருப்பிவிட்டார்கள்.
அதுமட்டமல்லாமல், நீதிமன்றத்தில் இந்த அரசு மன்னிப்பு கேட்டது. `நாங்கள் அவரை கைது எல்லாம் செய்யவில்லை, விசாரித்து விட்டுவிடுவோம்’ என்று பல்டி அடித்தார்கள்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், இந்த டெல்டா மண்டலம் என்றைக்குமே `திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை’ என்பதை நாம் மீண்டும் நிரூபித்துள்ளோம். ஏற்கனவே, சட்டமன்றத் தேர்தலில் இதை புரிய வைத்தீர்கள். நண்பர் அன்பில் மகேஷ் பேசும்போது, டெல்டா மாவட்டங்களில் இருக்கின்ற சுமார் 30 தொகுதிகளில் வெறும் 4 தொகுதிகளில் மட்டும்தான் இப்போது இருக்கின்ற ஆளுங்கட்சி வென்றுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.
புதிய அரசு அமைந்ததில் இருந்து கடந்த 105 நாட்களாக இந்த அரசால் அதிகம் பாதிக்கப்பட்டது யார் என்று பார்த்தீர்கள் என்றால், விவசாயப் பெருங்குடி மக்கள்தான். அதற்கு ஒரு சிறிய உதாரணம், இதற்கு முன்பு நமது தலைவர் ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது கடந்த 5 வருடங்கள் மேட்டூர் அணையிலிருந்து சரியாக ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சில வருடங்கள் அந்தத் தேதிக்கு முன்பாகவே தண்ணீரை நம் தலைவர் திறந்துவிட்டுள்ளார். ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்து இப்போதுவரை மேட்டூரிலிருந்து தண்ணீரைத் திறந்துவிடவில்லை.
காவிரியில் தண்ணீர் இல்லை. டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி இப்போது முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அதனால்தான் அந்தப் போரட்டத்திலும் சொன்னேன், மீண்டும் சட்டமன்றத்திலும் அதைப் பேசினேன். விவசாயிகளுக்குத் தயவுசெய்து இந்த அரசு வறட்சி நிவாரணம் கொடுக்க வேண்டும் என்றேன்.
அதற்கு இந்த முதல்வர், ஏற்கனவே சிறப்புத் தொகுப்பு கொடுத்துவிட்டோம் என்று சொன்னார். சிறப்புத் தொகுப்புக்கும், வறட்சி நிவாரணத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது, அதை தெரிந்துகொண்டு பேசுங்கள் என்று நான் அவையில் சொன்னேன்.
விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுக்க அரசிடம் நிதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்கி கொடுக்க இந்த அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கு எங்கிருந்து வந்தது உங்களுக்கு நிதி?
ஆனால் நம் தலைவர் தெளிவாகச் சொல்லிவிட்டார். நான் அதை சட்டசபையிலேயே பதிவு செய்துள்ளேன். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் இந்த அரசு கொடுக்கின்ற அந்த வாகனம் தேவையில்லை என்றும், முதலில் விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்த்து வையுங்கள் என்றும் சபையில் சொல்லிவிட்டேன்.
இந்த ஆட்சியாளர்கள் தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 கொடுப்போம் என்றார்கள், வருடத்துக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் கொடுப்போம் என்றார்கள், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 வழங்குவோம் என்றார்கள். ஆனால், கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.
சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை பற்றியெல்லாம் பேசலாம் என்று நாங்கள் குறிப்புகளை எடுத்துக்கொண்டு போகிறோம். ஆனால், நாங்கள் கேட்கக்கூடிய எந்தக் கேள்விக்கும் முதல்வர் பதில் சொல்வது கிடையாது. மூன்று அமைச்சர்கள் மட்டுமே அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறார்கள். அதுவும் நாங்கள் கேட்கக்கூடிய கேள்விக்கு பதில் சொல்வதில்லை. அனைத்தையும் திசை திருப்புவது போலத்தான் பதில்கள் இருக்கின்றன. இது திசை திருப்பும் உத்தி மட்டுமே.
அமைச்சர்களும் ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் மக்கள் பிரச்சினையைப் பேசுவதற்காக சட்டமன்றம் வரவில்லை. அவர்களுக்குத் தேவையானதெல்லாம் அன்று நான்கு ரீல்ஸ் கிடைத்தால் போதும். இவர்கள் சர்க்கார் நடத்துகிறார்களா அல்லது சர்க்கஸ் கம்பெனி நடத்துகிறார்களா என்று கேட்கும் அளவுக்குத்தான் இன்று அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன.
இதையே சற்றுப் பின்னோக்கி பாருங்கள். கடந்த 5 ஆண்டுகளாக நம்முடைய தலைவர், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக நம் தமிழ்நாட்டைக் கொண்டுவந்தார். 11.19 சதவிகித வளர்ச்சியோடு இந்தியாவில் வளரும் மாநிலங்களில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு இருந்தது. இன்று அதை பாதாளத்தில் தள்ளிவிட்டார்கள். இன்றைக்கு இந்த அரசாங்கம் ஒரு டம்மி அரசாங்கமாக, தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பின்னோக்கி இழுத்துக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் நடக்கும் எந்தப் பிரச்சினையைப் பற்றியும் முதல்வருக்கு கவலை கிடையாது. இவற்றையெல்லாம் இன்று மக்கள் பார்த்து, இப்போது உணரத் தொடங்கியிருக்கிறார்கள். விரைவில் இந்த ஆட்சியாளர்களின் ஆணவத்திற்கும் கோமாளித்தனத்திற்கும் மக்கள் ஒரு சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்” என தெரிவித்தார்.