

எ.வ.வேலு | கோப்புப்படம்
புதுடெல்லி: தமிழகத்தில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம் பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலை களை மேம்படுத்த ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.
எந்த இடத்திலும் பணிகளே நடைபெறாத நிலையில், முன்கூட்டியே தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு கோடிக்கணக்கில்தொகை விடுவிக்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் கடந்த 2022-ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.
எ.வ.வேலு மற்றும் தொடர்புடையவர்களின் வீடுகளில் கடந்த ஜூன் 25-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அடுத்த நாளான 26-ம் தேதி எ.வ.வேலு மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அவரைத் தேடப்படும் நபராக அறிவித்து போலீஸார் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.
தனக்கு எதிரான வழக்கையும், லுக்-அவுட் நோட்டீஸையும் ரத்து செய்யக் கோரி எ.வ.வேலு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ஜூலை 27-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும். அதுவரை மனுதாரருக்கு எதிராக போலீஸார் கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது. லுக்-அவுட் நோட்டீஸ் விவகாரத்தில் எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் முன்பு ஜூலை 15-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்”என்று நிபந்தனை விதித்தது. மேலும் லுக்-அவுட் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்கறிஞர் விருந்தா பண்டாரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பிரசந்தோ சந்திர சென் ஆஜராகி, முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவை கைது செய்யக் கூடாது என்ற பொருளில் பொதுவான உத்தரவை உயர்நீதிமன்றம் தெளிவு இல்லாமல் பிறப்பித்துள்ளது.
மேல்முறையீடு மனுவை செவ்வாய்கிழமை (இன்று) விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். உயர் நீதிமன்ற உத்தரவில் தெளிவு பெற உயர் நீதிமன்றத்தையே நாடலாம் என்று முதலில் தெரிவித்த தலைமை நீதிபதி, பின்னர் தமிழ்நாடு அரசின் மனுவை புதன்கிழமை (நாளை) விசாரிப்பதாகத் தெரிவித்தார். இதனிடையே, தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுவை விசாரிக்கும் தனது தரப்பு கருத்தைக் கேட்காமல் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று குறிப்பிட்டு எ.வே.வேலு சார்பில் வழக்கறிஞர் டி.குமணன் கேவியட் மனு தாக்கல் செய்துஉள்ளார்.