

சென்னை: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்காக, தாய் மாமன் தங்க மோதிரம் வாங்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. இந்தத் திட்டத்தைச் செப்டம்பர் 15-ம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது, ‘‘தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் கொண்டு வரப்படும்’’ என்று தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார். இந்தத் திட்டம் பொதுமக்களிடம் குறிப்பாக பெண்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. அதன்பின், தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வரானார்.
இந்நிலையில், தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக, ‘தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்’ தொடர்பான அரசாணையைத் தமிழக அரசின் சார்பில் சுகாதாரத் துறை வெளியிட்டது. அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களில் மிகவும் முக்கியமான திட்டம் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம். அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும், பிரசவித்த தாயையும் கவுரவிக்கும் விதமாக தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
தமிழர் பாரம்பரியம்: தமிழர் பாரம்பரியத்தில் குழந்தை பிறந்த பிறகு தாயின் சகோதரர் தங்கம் உள்ளிட்ட பரிசுகளை வழங்குவது வழக்கம். அந்த மரபின்படி, பிறந்த குழந்தையைத் தாய் மாமன் வரவேற்று வாழ்த்தும் வகையிலும், தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் மாமனின் பங்கை ஏற்று, அன்பும் அக்கறையும் நிறைந்த வரவேற்பின் அடையாளமாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
ரூ.755.83 கோடி நிதி: தமிழக அரசின் சுகாதார சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையின் பிறப்பை நினைவு கூறும் வகையிலும் தாய்மையின் மகிழ்ச்சி, முக்கியத்துவத்தைக் கொண்டாடும் வகையிலும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்கிறது. இந்த திட்டத்தின் கீழ், ஜூன் 22-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன்பெறுவார்கள். தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்குத் தங்க மோதிரங்களை வாங்குவதற்காக, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (டிஎன்எம்எஸ்சி) நேற்று டெண்டர் கோரியுள்ளது.
4,41,667 மோதிரங்கள்: அந்த டெண்டரில், “தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு 4 லட்சத்து 41,667 தங்க மோதிரங்கள் 22 கேரட் தரத்தில் (916 ஹால்மார்க் சான்றிதழ்) கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதற்காக ஆகஸ்ட் 17-ம் தேதி வரை ரூ.5,725 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 18-ம் தேதி டெண்டர் திறக்கப்படும். விண்ணப்பிப்பவர்கள் வைப்பு தொகையாக ரூ.50 லட்சத்தை செலுத்த வேண்டும்.
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை தேவைப்படும் தங்க மோதிரங்களை ஆகஸ்ட் மாதத்தில் ஒரு லட்சத்து 28,499 தங்க மோதிரங்கள், செப்டம்பர் மாதத்தில் ஒரு லட்சத்து 17,438 தங்க மோதிரங்கள் வழங்க வேண்டும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை தேவைப்படும் ஒரு லட்சத்து 17,438 தங்க மோதிரங்களை நவம்பர் மாதத்திலும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்துக்குத் தேவைப்படும் 78,292 தங்க மோதிரங்களை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் விஜய், கடந்த 1974-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்தார். திரைத் துறையில் பெரிய நடிகராக வளர்ந்த பிறகு, தனது பிறந்த நாளை பெரும்பாலும் எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கொண்டாடி வருகிறார்.
அன்றைய தினம் அங்குப்பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தைப் பரிசாக வழங்குவது வழக்கம். இந்நிலையில்தான் தேர்தல் பிரச்சாரத்தின் போதே அவர் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை வாக்குறுதியாக அளித்திருந்தார். தவெக அரசு பதவியேற்ற பிறகு, தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
ரூ.580 கோடி: ஒரு கிராம் தங்கத்தின் (22 கேரட்) விலை நேற்றைய நிலவரப்படி ரூ.13,150 ஆக இருந்தது. தமிழக அரசு டெண்டர் வெளியிட்டுள்ள ஒரு கிராம் எடையில் 4 லட்சத்து 41,667 தங்க மோதிரங்களின் மொத்த மதிப்பு ரூ.580 கோடியே 79 லட்சத்து 21,050 ஆகும். இதில் செய் கூலி, சேதாரம், ஜிஎஸ்டி சேர்த்தால் விலை மேலும் அதிகரிக்கும்.