

சென்னை: தமிழகத்தில் அரிசி, பருப்பு, உளுந்து ஆகியவற்றின் விலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரிசியை பொறுத்தவரை மொத்த விற்பனையாளர்கள் 2 ஆயிரம் டன் நெல் அல்லது அரிசி வைத்துக் கொள்ளலாம். சில்லறை வியாபாரி கள் ஒவ்வொருவரும் 8 டன் வைத்திருக்கலாம்.
அரிசி ஆலை வைத்திருப்பவர் கள் ஒரு மாதத்துக்கான அரிசியை இருப்பு வைத்துக் கொள்ளலாம். இறக்குமதி செய்வோர் 45 நாட்களுக்கு மேல் இறக்குமதி செய்த பொருட்களை இருப்பு வைத்திருக்கக் கூடாது.
பருப்பு, உளுந்தை பொறுத்தவரை மொத்த விற்பனையாளர்கள் துவரம் பருப்பு, உளுந்து ஆகியவற்றில் தலா 200 டன் வரை மட்டுமே இருப்பு வைத்துக் கொள்ளலாம். சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பெரிய சங்கிலித் தொடர் கடைகள் ஒவ்வொரு பருப்பு வகையிலும் தலா 5 டன் வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம்.
பருப்பு ஆலைகளை பொறுத்தவரை, கடந்த 3 மாதங்களின் உற்பத்தி அளவு அல்லது ஆண்டுக்கான நிறுவப்பட்ட உற்பத்தித் திறனில் 25 சதவீதம் ஆகியவற்றில் எது அதிகமோ, அந்த அளவு வரை இருப்பு வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
இறக்குமதியாளர்கள், சுங்கத்துறையின் அனுமதி கிடைத்த நாளில் இருந்து 45 நாட்களுக்கு மேல் இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு வகைகளை இருப்பு வைத்திருக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட் டுள்ளது.
மேலும், வியாபாரிகள் தங்களிடம் உள்ள துவரம் பருப்பு, உளுந்து இருப்பு விவரங்களை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறையின் இணையதளத்தில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பருப்பு வகைகளை இருப்பு வைத்துள்ள வியாபாரிகள், நவ.16-ம் தேதிக்குள் நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் இருப்பை குறைக்க வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும்
இந்த நடவடிக்கையின் மூலம் அரிசி, பருப்பு வகைகளின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், சந்தையில் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்வதை உறுதி செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.