

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள 'முரசு' புயல் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இருப்பினும், இதன் தாக்கத்தால் அடுத்த சில நாட்களுக்கு வட தமிழகத்தில் கனமழை, பலத்த சூறைக்காற்று நிலவும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை மற்றும் வருவாய் நிர்வாக ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நவம்பர் 1 பிற்பகல் நிலவரப்படி, 'முரசு' புயல் வங்காள விரிகுடாவில், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 480 கி.மீ. தொலைவில் நிலைகொண்டு மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இப்புயல் நவம்பர் 2 காலைக்குள் தீவிர புயலாக வலுப்பெற்று, நவம்பர் 2 இரவு முதல் நவம்பர் 3 அதிகாலைக்குள் ஆந்திராவில் நெல்லூர் மற்றும் நரசாபுரம் இடையே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. புயல் ஆந்திராவில் கரையைக் கடக்கும் என்றாலும், தமிழகத்தின் கடலோர மற்றும் வடக்கு மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றும் கனமழையும் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 2 மற்றும் நவம்பர் 3 ஆகிய தேதிகளில் வட தமிழகத்தில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமுதல் மிகக் கனமழையும் பெய்யக்கூடும்.
நவம்பர் 1-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும்; சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்குக் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நவம்பர் 2-ஆம் தேதி சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும்; வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் நவம்பர் 1 பிற்பகலில் 40-50 கி.மீ/மணி வேகத்திலும் (அதிகபட்சம் 60 கி.மீ/மணி வரை), நவம்பர் 2 காலையில் 55-65 கி.மீ/மணி வேகத்திலும் (அதிகபட்சம் 75 கி.மீ/மணி வரை) வீசக்கூடும். நவம்பர் 2 மாலை முதல் நவம்பர் 3 காலை வரை காற்றின் வேகம் 60-70 கி.மீ/மணி வேகத்திலும், அதிகபட்சமாக 80 கி.மீ/மணி வரையிலும் அதிகரிக்கும். பின்னர் நவம்பர் 3 பிற்பகல் முதல் காற்றின் வேகம் படிப்படியாகக் குறையும்.
நவம்பர் 1 பிற்பகல் முதல் நவம்பர் 4 காலை வரை வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கடல் மிகக் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் 4 முதல் 6 மீட்டர் வரை உயர் அலைகள் எழக்கூடும். இதனால் வட தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதிகளுக்கு நவம்பர் 4 காலை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக அருகிலுள்ள துறைமுகம் அல்லது கரைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் ஈசிஆர், ஓஎம்ஆர் போன்ற கடலோரச் சாலைகள், கடற்கரைகள் மற்றும் கடல் சுவர்களில் இருந்து தள்ளிப் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும். பொழுதுபோக்கிற்காகவோ புகைப்படங்கள் எடுக்கவோ கடற்கரைக்குச் செல்வதையும், ஆழம் தெரியாத நீர் தேங்கிய பகுதிகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் நடப்பதையோ வாகனம் ஓட்டுவதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
வீடுகளில் போதுமான குடிநீர், தேவையான மருந்துகள், பவர் பேங்க், டார்ச் லைட் போன்ற அத்தியாவசியப் பொருட்களைத் தயாராக வைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பலத்த காற்றில் பறக்கக்கூடிய தகரத் தகடுகள் மற்றும் விளம்பரப் பலகைகளைப் பத்திரப்படுத்த வேண்டும். ஈரமான மின் கம்பங்கள் மற்றும் அறுந்து விழுந்த மின் கம்பிகளைத் தொடக்கூடாது. பலவீனமான அல்லது பாதுகாப்பற்ற கட்டடங்களில் தங்குவதைத் தவிர்த்து, தேவைப்பட்டால் அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்களுக்குச் செல்ல வேண்டும்.
மேலும், வதந்திகளை நம்பவோ சமூக ஊடகங்களில் பகிரவோ வேண்டாம் என்றும், வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வத் தகவல்களை மட்டுமே பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவசர உதவிக்கு மாநில அவசர உதவி எண் 1070 மற்றும் மாவட்ட அவசர உதவி எண் 1077 ஆகியவற்றைத் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.