தீவிர புயலாக வலுப்பெறும் 'முரசு' - சென்னை, திருவள்ளூரில் மிக கனமழைக்கு வாய்ப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
2 min read

சென்னை: வங்கக் கடலில் நிலவும் 'முரசு' புயல், தீவிர புயலாக வலுப்பெற்று நாளை நள்ளிரவில் ஆந்திர கடலோரப் பகுதியில் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது, அதிகபட்சமாக மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்றும், இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(திங்கள்கிழமை) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

பின்னர் இது மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகளில் 'முரசு' புயலாகவும் உருவெடுத்துள்ளது. இந்த புயல், மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.

இது மேலும் மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நெல்லூர் மற்றும் நரசப்பூர் இடையே நாளை (நவ.2) நள்ளிரவு அல்லது நாளை மறுநாள் அதிகாலை கரையை கடக்கக்கூடும்.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (நவ.2) சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

3-ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூர், காஞ்சிபுரத்தில் தலா 7 செ.மீ., நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட், கீழ்கோத்தகிரி எஸ்டேட்டில் 5 செ.மீ., ஈரோடு மாவட்டம் பவானிசாகர், சத்தியமங்கலம், குண்டேரிப்பள்ளம், சேலம் மாவட்டம் ஆத்தூர், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'முரசு' புயல் பெயர் காரணம்: உலக வானிலை நிறுவன அறிவுறுத்தல்படி, வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைப்பதற்காக இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் கடந்த 2020-ம் ஆண்டு ஏராளமான பெயர்களை பரிந்துரை செய்திருந்தன. அப்பெயர்களை அங்கீகரித்து உலக வானிலை நிறுவனம் பட்டியலை வெளியிட்டிருந்ததது.

அதன் பிறகு உருவான புயல்களுக்கு வரிசையாக பெயரிடப்பட்டு வருகின்றன. இதில் இந்திய வானிலை மையம் பரிந்துரை பெய்த தமிழ் பெயர் 'முரசு', தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு சூட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் பண்டைய மன்னர் காலத்தில் போர் போன்ற பேரிடர், வெற்றியை அறிவித்தல், முக்கிய செய்திகளை அறிவிப்பதற்காக 'முரசு' கொட்டப்பட்டது. இப்பெயரை, 2020-ம் ஆண்டு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக இருந்த நா.புவியரசன் இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கு பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
“மீண்டும் 5 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியாக இருக்க தயாராகுங்கள்”: காங்கிரசை சாடிய அமித் ஷா

X