மேகேதாட்டு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுஆய்வு மனு

தலைமை நீதிபதி அமர்வில் நாளை விசாரணை
மேகேதாட்டு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுஆய்வு மனு
Updated on
2 min read

புதுடெல்லி/ சென்னை: மேகே​தாட்டு அணை திட்​டத்​துக்கு எதி​ரான தமிழக அரசின் மனுவை உச்ச நீதி​மன்​றம் கடந்த ஆண்டு நிராகரித்த நிலை​யில், அந்த உத்​தரவை மறுஆய்வு செய்​யக் கோரி தமிழக அரசு மனு தாக்​கல் செய்​துள்​ளது. தலைமை நீதிபதி அமர்​வில் இந்த மறுஆய்வு மனு நாளை விசா​ரணைக்கு வரு​கிறது.

கர்​நாட​கா​வில் காவிரி ஆற்​றின் குறுக்கே மேகே​தாட்டு அணை கட்​டு​வது தொடர்​பான விரி​வான திட்ட அறிக்​கையை ஆய்வு செய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​துக்கு தடை​வி​திக்க கோரி தமிழக அரசு, தேசிய தென்​னிந்​திய நதி​கள் இணைப்பு விவ​சா​யிகள் சங்​கத் தலை​வர் அய்​யாக்​கண்ணு உள்​ளிட்​டோர் தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

கடந்த 2025 நவ.13-ம் தேதி அப்​போதைய தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் அமர்​வில் இந்த மனுக்​கள் விசா​ரணைக்கு வந்​தன. அப்​போது, ‘கா​விரி​யின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்​டும் கர்​நாடக அரசின் முயற்​சி, காவிரி தீர்ப்​பா​யத்​தின் உத்​தரவை மீறும் செயலாகும். இத்​திட்​டம் செயல்​பாட்​டுக்கு வந்​தால் தமிழகம் பெரிதும் பாதிக்​கப்​படும்’ என்று தமிழக அரசு சார்​பில் வாதிடப்​பட்​டது.

‘மேகே​தாட்டு அணை திட்​டத்தால் தமிழகம் எந்த வகை​யிலும் பாதிக்​கப்​ப​டாது. தமிழகத்துக்கு ஒதுக்​கப்​பட்ட தண்​ணீரை வழங்க இத்​திட்​டம் தடை​யாக இருக்​காது’ என்று கர்​நாடக அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி​கள், “கர்​நாடக அரசின் திட்ட வரைவு அறிக்​கை, காவிரி ஆணை​யம் மற்​றும் காவிரி ஒழுங்​காற்​றுக் குழு​வின் பரிசீலனை​யில் மட்​டுமே உள்​ளது.

அந்த அமைப்​பு​கள் ஒப்​புதல் அளித்​தால் மட்​டுமே வரைவு அறிக்கை ஏற்​கப்​படும் என்று மத்​திய நீர் ஆணை​யம் தெளிவுபடுத்தி உள்​ளது. தவிர, காவிரி வழக்​கின் தீர்ப்​பின்​படி தண்​ணீரை திறக்க மறுத்​தால் கர்​நாடக அரசு நீதி​மன்ற அவம​திப்​புக்கு உள்​ளாகும்.

மேலும், மேகே​தாட்டு அணைக்​கான விரி​வான திட்ட அறிக்​கைக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டால் அதை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு வழக்கு தொடரலாம்.

தற்​போதைய சூழ்​நிலை​யில், தமிழக அரசின் இந்த மனு அவசரப்​பட்டு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ள​தால், விசா​ரணைக்கு ஏற்க முடி​யாது” என்று கூறி, தமிழக அரசின் மனுவை நிராகரித்​தனர்.

இந்​நிலை​யில், இந்த உத்​தரவு காவிரி வழக்​கில் உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்​புக்கு முரணாக இருப்​ப​தாக​வும், மேகே​தாட்டு அணை திட்​டத்​துக்​கான விரி​வான திட்ட அறிக்​கைக்கு ஒப்​புதல் அளிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​துக்கு அதி​காரம் இல்லை என்​றும் தெரி​வித்து உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு சார்​பில் மறுஆய்வு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்த மனுவை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த், நீதிப​தி​கள் கே.​வினோத் சந்​திரன், வி.எம்​.பஞ்​சோலி அமர்வு நாளை (ஏப்​.15) விசா​ரிக்​க உள்ளது.

இதனிடையே மறுஆய்வு மனுக்​கள் வழக்​க​மாக நீதிப​தி​கள் அறை​யில் விசா​ரிக்​கப்​படும். ஆனால், இந்த மனுவை நீதி​மன்​றத்​தில் விசா​ரிக்க கோரி தலைமை நீதிபதி அமர்​வில் தமிழக அரசு சார்​பில் நேற்று முறை​யிடப்​பட்​டுள்​ளது.

மேகேதாட்டு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுஆய்வு மனு
தானம் பெற்ற இதயம் 85 நிமிடத்தில் 98 கி.மீ. பயணம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in