

புதுடெல்லி: திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுத்து, இரு நீதிபதிகள் அமர்வு நேற்று உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார் சார்பில் வழக்கறிஞர் சபரீஷ் சுப்ரமணியன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விரைந்து விசாரிக்குமாறும் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று மனுதாரரான ராம ரவிக்குமார் தரப்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.