

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வந்தவர்களை தடுத்ததால், மதுரை மாநகர காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மனுதாரர் ராம. ரவிக்குமார் மற்றும் அவரது வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் உள்ளிட்டோர்.
மதுரை: உயர் நீதிமன்றம் நேற்று 2-வது முறையாக உத்தரவிட்டும், அதை ஏற்காமல் தீபத்தூணில் தீபம் ஏற்ற போலீஸார் அனுமதி வழங்க மறுத்தனர். இதுகுறித்து நியாயம் கேட்க வந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இதனால் தீபத்தை தரிசிக்க மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருந்த பக்தர்கள் ஆவேசம் அடைந்தனர். கொந்தளித்த இந்து அமைப்பினர் பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்டதால் திருப்பரங்குன்றத்தில் பதற்றம் நீடிக்கிறது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார் உள்ளிட்ட 4 பேர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
பக்தர்கள் திரண்ட நிலையில், நீதிமன்ற தீர்ப்பை ஏற்க போலீஸார் மறுத்தனர். இதையடுத்து, உடனே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் மனுதாரர் 10 பேர் சென்று தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே, மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை பிறப் பித்தது. இதை சுட்டிக்காட்டி போலீஸார், மத்தியப் படையினரை திருப்பி அனுப்பினர்.
அரசின் மனு தள்ளுபடி: இதற்கிடையே, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் இந்த மனு நேற்று காலை விசாரணைக்கு வந்தது. தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்து, தமிழக அரசின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
இதை தொடர்ந்து, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று மாலை விசாரணைக்கு வந்தது. அப்போது, 144 தடை உத்தரவை ரத்து செய்தும், தீபத் தூணில் நேற்றே தீபம் ஏற்றுமாறும் உத்தரவிட்டார். இதையடுத்து, உறுதியாக தீபம் ஏற்றப்படும் என்ற நம்பிக்கையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, ராம.ஸ்ரீனிவாசன் தலைமையில் இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் தீபம் ஏற்றும் நிகழ்வைப் பார்க்கவும், திருப்பரங்குன்றம் கோயிலில் வழிபாடு நடத்தவும் கோயில் முன்பு ஆயிரக்கணக்கில் திரண்டனர்.
அப்போது அங்கு வந்த மதுரை மாநகர காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன், ‘‘கோயில் முன்பு கூடிநிற்பவர்கள் அனைவரும் கலைந்து செல்ல வேண்டும். 144 தடை உத்தரவை நீதிபதி ரத்து செய்ததை எதிர்த்தும், மனுதாரர் உட்பட 10 பேர் தீபம் ஏற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதால், யாரையும் மலை உச்சிக்கு அனுமதிக்க முடியாது’’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
நயினார் நாகேந்திரன், போலீஸாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மனுதாரர்களை மட்டுமாவது தீபம் ஏற்ற அனுமதிக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், போலீஸார் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததை கண்டித்து நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா தலைமையில் பாஜகவினர், இந்து அமைப்பினர், பாஜகவினர் ஏராளமானோர் கோயில் முன்பு திரண்டு ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா’ என்று முழக்கமிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். கிரிவலப்பாதையில் ராம.ஸ்ரீனிவாசன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், உரத்த குரலில் கந்த சஷ்டி கவசம் பாடினர்.
ஏராளமானோர் கைது: போலீஸார் அவர்களை கைது செய்ய முயன்றபோது போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. இதையடுத்து, நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா, ராம னிவாசன் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான பாஜகவினர், இந்து அமைப்பினரை போலீஸார் கைது செய்துபோலீஸ் வாகனங்களில் ஏற்றினர். அவர்களை விடுவிக்கக் கோரி பல்வேறு இடங்களில் இந்து அமைப்பினர் மறியல் போராட்டம் செய்தனர். இதனால் திருப்பரங்குன்றம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, செய்தியாளர்களிடம் மனுதாரர் ராம ரவிக்குமார் கூறும்போது, ‘‘இரவு 8.30 மணி வரை நம்பவைத்தும், காத்திருக்க வைத்தும் அவமானப்படுத்தினர். இதற்கு காரணம் காவல் ஆணையர்தான். நீதிமன்ற உத்தரவை மதிக்காத மாநகர காவல் ஆணையர் மீது அவமதிப்பு வழக்கு தொடர உள்ளேன்’’ என்றார்.
மனுதாரரின் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் கூறியபோது, ‘‘மாநிலத்தின் உச்சபட்ச அதிகாரம் படைத்தது உயர் நீதிமன்றமே. அந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அரசும், போலீஸாரும் அமல்படுத்த மறுக்கிறது. இதை நினைத்தால் பயமாக இருக்கிறது. இதே நடைமுறையை மற்ற மாநில அரசுகளும் பின்பற்றத் தொடங்கினால் நீதித்துறையின் மாண்பே கேள்விக்குறியாகிவிடும்’’ என்றார்.