

சென்னை: தமிழக அரசின் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கும், திருவிக விருது முன்னாள் தலைமைச்செயலர் வெ.இறையன்புவுக்கும் அறி விக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருக்குறள் நெறிபரப்புவோருக்கான திருவள்ளுவர் விருது, இந்தாண்டு மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கு வழங்கப்படுகிறது.
அதேபோல் கடந்த 2025-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது வழக்கறிஞர் அ.அருள்மொழிக்கும் அண்ணல் அம்பேத்கர் விருது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் சட்டப்பேரவை குழுத் தலைவர் சிந்தனைச் செல்வனுக்கும் பேரறிஞர் அண்ணா விருது அமைச்சர் துரை முருகனுக்கும் வழங்கப்படுகிறது.
பெருந்தலைவர் காமராஜர் விருது தேசிய ஒருமைப்பாட்டுப் பேரவையின் தலைவர் எஸ்.எம். இதயத்துல்லாவுக்கும், மகாகவி பாரதியார் விருது கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் யுகபாரதிக்கும், தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது முன்னாள் தலைமைச்செயலர் வெ.இறையன்புவுக்கும் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது சு.செல்லப்பாவுக்கும், முத்தமிழறிஞர் கலைஞர் விருது விடுதலை விரும்பிக்கும் வழங்கப்படுகிறது. விருதாளர்களுக்கு ரூ.5 லட்சம் விருதுத்தொகை, ஒரு பவுன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்படும்.
தமிழ் விருதுகள்: மேலும், 2025-ம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுகளில் மரபுத் தமிழ் வகைப் பாட்டில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, “உலகின் பல்வேறு நாடுகளில் செம்மாந்த இலக்கிய உரைகளை நிகழ்த்தி வரும், இலக்கியச் சுடர் த.ராமலிங்கத்துக்கும், ஆய்வுத் தமிழ் வகைப்பாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரனுக்கும் படைப்புத் தமிழ் வகைப்பாட்டில் விருது நகரைச் சேர்ந்த நரேந்திர குமாருக்கும் விருது வழங்கப்படுகிறது.
இவ்விருதாளர்களுக்கு ரூ.5 லட்சம் விருதுத்தொகை, ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவை வழங்கப்படும். இவ்விருதுகள், வரும் ஜன.16-ம் தேதி திருவள்ளுவர் தினத்தில் முதல்வர் முக..ஸ்டாலினால் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.