

சென்னை: ‘அமெரிக்காவின் வரி விதிப்பைக் கண்டித்து சென்னை, கோவை, திருப்பூர், ஈரோட்டில் ஜன.23-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய, மாநில தனியார் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் மட்டுமே இருக்கும் வகையில் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டிருப்பது மாநில உரிமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும்.
ஆளுநரின் தவறான செய்கைகளுக்கு நாட்டின் குடியரசு தலைவரும் துணை போவது அதிர்ச்சியளிக்கிறது. இலங்கையில் தமிழர்களுக்குப் பயன் கிடைக்கும் வகையில் கூட்டாட்சி முறையிலான அதிகாரப் பகிர்வு உறுதி செய்யப்பட வேண்டும்.
இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த 500 சதவீத வரி விதிப்பால் திருப்பூர், கோவை போன்ற தொழில் நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். இதைக் கண்டித்து கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னையில் ஜன.23-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
மேலும், புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகள் உட்பட தொழிலாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து பிப்.12-ல் நடைபெறவுள்ள அனைத்து தொழிற்சங்க பொது வேலைநிறுத்தத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவளிக்கும்.
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு மலையேற விருப்பம் இருக்கிறது என்றால் இமயமலைக்கு சென்று பயிற்சி எடுத்து, இமயமலையை ஏறி இறங்கலாம். ஏன் திருப்பரங்குன்றத்தில் மட்டும் ஏற நினைக்கிறார். இந்த பதற்ற அரசியல் அவர்களுக்கு கைகொடுக்காது. தமிழகத்தின் ஆட்டமே வேறு. இவ்வாறு கூறினார்.