

கோப்புப்படம்
சென்னை: மின்வாரிய ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33 சதவீதம் மற்றும் கருணைத் தொகை 11.67 சதவீதம் என மொத்தமாக 20 சதவீதம் வரை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு: 2025–2026 நிதியாண்டுக்கான மின்வாரியம் உள்ளிட்ட அரசு மின் நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாடு மின் விநியோகக் கழகம், மின் உற்பத்தி கழகம், பசுமை ஆற்றல் கழகம் மற்றும் மின் தொடரமைப்புக் கழகம் ஆகிய நிறுவனங்களின் ஊழியர்கள் பயன்பெறுவர்.
தகுதியுள்ள தொழிலாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 20 சதவீதம் அறிவிக்கப்படுகிறது. இதற்காக ஒரு ஊழியரின் மாதச் சம்பளம் ரூ.7 ஆயிரமாக கணக்கிடப்பட்டு, அதிகபட்சமாக ரூ.6,997 போனஸ் ஆகவும், ரூ.9,803 கருணைத்தொகை ஆகவும் வழங்கப்படும். இதன்படி முழுமையாகப் பணிபுரிந்த ஒரு ஊழியருக்கு அதிகபட்சமாக மொத்தம் ரூ.16,800 போனஸ் தொகையாகக் கிடைக்கும்.
தற்காலிக, பயிற்சி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள், பகுதிநேர துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் பிற துறைகளில் இருந்து இங்கு அயற்பணியில் வந்தவர்களுக்கும் போனஸ் வழங்க தகுதி உடையவர்கள். மேலும், கடந்த நிதியாண்டில் பணிபுரிந்து தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள், ஓய்வு பெற்றவர்கள் அல்லது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கும் தகுதி அடிப்படையில் இந்த போனஸ் விகிதாச்சாரப்படி வழங்கப்படும்.
இந்த போனஸ் தொகை முழுவதும் ரொக்கமாக வழங்கப்படாமல், வங்கி பரிவர்த்தனை தடையற்ற ரொக்கமில்லா பணப்பரிமாற்ற முறையில் வரும் நவ.4ம் தேதிக்குள் அனைத்து ஊழியர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.