

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் நேற்று சந்தித்துப் பேசினார்.
சென்னை: தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் டெல்லியில் சந்தித்துப் பேசினார். இந்த நிகழ்வின்போது மாநில சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் அதிகரித்துவிட்டதாக திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக தீபாவளி பண்டிகையை ஒட்டிய 2 நாட்களில் 11 கொலைகள் நடைபெற்றன. இதையடுத்து மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வர் விஜய், தலைமைச் செயலர் எம்.சாய்குமார் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர் ஆலோசனை நடத்தப்பட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையொட்டி மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான ரவுடிகள் கைது செய்யப்பட்டதுடன், குற்றங்கள் நடைபெறுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தற்போது முழுவீச்சில் தீவிரப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், மாநில ஆளுநரிடம் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதில், சமீபகாலமாக தமிழகத்தில் நிகழ்ந்துள்ள குற்றச்சம்பவங்கள், மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முறையாக மதிப்பீடு செய்து அறிக்கை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் டெல்லியில் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 1.30 மணி நேரம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்த அறிக்கையை ஆளுநர் சமர்ப்பித்ததாகவும், அதுதொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், தவெக புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள் என்பதால், நிர்வாக செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணிக்குமாறு ஆளுநருக்கு, அவர் அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது.
அதேநேரம் மாநிலத்தின் முழுநேர ஆளுநராக பதவியேற்றதை அடுத்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் சமீபத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
அந்தவகையில் தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், அவர் சந்தித்ததாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் தற்போதைய பரபரப்பான அரசியல் சூழலில், மத்திய அமைச்சர் அமித் ஷாவுடனான ஆளுநர் அர்லேகரின் சந்திப்பானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.