

குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கேக்குகள் மற்றும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. சென்னை, பெரம்பூர், கபிலர் தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு கேக்குகள் மற்றும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளை முதல்வர் விஜய் வழங்கினார்.
சென்னை: குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நேற்று ‘கேக்’ வழங்கப்பட்டது. சென்னையில் உள்ள பள்ளியில் முதல்வர் விஜய் ‘கேக்’ வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்குக் ‘கேக்’ மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ரூ.9.27 கோடியில் 61.84 லட்சம் ஸ்பாஞ்ச் கேக் பாக்கெட்கள் கொள்முதல் செய்யப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. குழந்தைகள் தினமான இன்று (நவம்பர் 14) சனிக்கிழமை விடுமுறை என்பதால் ஒருநாள் முன்பாக கேக் வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி இத்திட்டத்தை முதல்வர் விஜய் சென்னை கொளத்தூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது மாணவர்களுக்கு ‘கேக்’ மற்றும் தனது புகைப்படத்துடன் ‘ஆல் இஸ் வெல்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளை வழங்கி மகிழ்வித்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராஜ்மோகன், ஸ்ரீநாத், ஜெகதீஸ்வரி, தலைமை செயலர் எம்.சாய்குமார், கூட்டுறவுத் துறை செயலர் பெ.அமுதா, சமூகநலத் துறை செயலர் பல்லவி பல்தேவ், பள்ளிக் கல்வித் துறை செயலர் இன்னசென்ட் திவ்யா, இயக்குநர் பூ.ஆ.நரேஷ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அங்குள்ள ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் கேக்குகள் வழங்கப்பட்டன.
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகள் வேலுநாச்சியார், நேரு, பாரதியார் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் வேடங்களிட்டு, அவர்கள் கூறிய கருத்துகளைச் சுட்டிக்காட்டி பேசினர். அவற்றை கேட்டு ரசித்த முதல்வர் விஜய், குழந்தைகளை வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தார். அதேபோல், கேக் வழங்கும் போது மழலையர் வகுப்பில் இருந்த ஒரு மாணவனை தூக்கி, கேக் ஊட்டி விட்டபடியே, ‘பிடிச்சிருக்கா?, நல்லா இருக்கா?’ என்று சிரித்தபடியே முதல்வர் விஜய் விசாரித்தார்.
அதன்பின் அங்குள்ள அங்கன்வாடிக்குச் சென்ற முதல்வர், குழந்தைகளுக்குத் தனது கையால் சர்க்கரை பொங்கல் பரிமாறினார். மேலும், சத்துணவு கூடத்துக்கு சென்று அங்குள்ள பொருட்களின் தரம் மற்றும் உணவு குறித்து சமையலர்களிடம் கேட்டறிந்ததுடன், மதிய உணவையும் சாப்பிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதல்வர் விஜய் பள்ளியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதேபோல், மாநிலம் முழுவதும் அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை அலுவலர்கள், பள்ளிகளில் குழந்தைகள் தின விழாவில் பங்கேற்று மாணவர்களுக்குக் கேக்குகள் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கினர். அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்குச் சர்க்கரைப் பொங்கலையும் வழங்கினர். ஒட்டுமொத்தமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என 61 லட்சத்து 84,566 பேர்களுக்குக் கேக்குகள் வழங்கப்பட்டன. அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி பயிலும் 11 லட்சத்து 11,022 குழந்தைகளுக்குச் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
குழந்தைகள் தினவிழாவை முடித்துவிட்டு முதல்வர் விஜய், பெரம்பூரில் உள்ள தனது எம்எல்ஏ அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு அமைக்கப்பட்டுள்ள வெற்றி நூலகத்தைத் திறந்து வைத்து பார்வையிட்டார். அதன் பின்பு அங்குள்ள இ-சேவை மையத்தில் விண்ணப்பித்தவர்களுக்குச் சான்றிதழ்களை அவர், வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தவர், கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.