

விஐடி சென்னை வளாகத்தில் நடைபெற்ற ‘நீதிக்களம் 2026’ என்ற சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நிறைவடைந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு விருதுகள், சான்றிதழ்களை வழங்கினார். உடன் உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு, விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தேசிய துணைத் தலைவர் நாகலிங்கம், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்.படம்: எம்.முத்துகணேஷ்
மேலக்கோட்டையூர்: வண்டலூர் அருகே மேலக்கோட்டையூரில் உள்ள விஐடி சென்னையில், தமிழ்நாடு சட்டக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு இணைந்து `நீதிக்களம்' என்ற 2 நாள் தேசிய அளவிலான கருத்தரங்கத்தை நடத்தின.
`வளர்ச்சியடைந்த இந்தியாவில் சட்டத் துறையின் பங்களிப்பு' என்ற தலைப்பில் நடந்த இந்த கருத்தரங்கில் தமிழகம் முழுவதிலுமிருந்து 700-க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். கருத்தரங்கின் நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவில் விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேசும்போது, ``இந்தியாவில் 5 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கு முக்கியக் காரணம், நம் நாட்டில் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதுதான்.
குறைவான மக்களே நீதித் துறையை அணுகி நீதியை பெறக் கூடிய நிலை உள்ளது. கல்வித் துறை சார்ந்த வழக்குகளும் நிலுவையில் இருந்து வருகின்றன. நீதிமன்றங்களில் மக்கள் தங்களுக்கு உண்மையான நீதி கிடைக்கும் என நீதிமன்றங்களை நாடுகின்றனர்.
வளர்ச்சியடைந்த இந்தியாவை அடைய நீதித் துறைவளர வேண்டும். பொருளாதார வளர்ச்சி மட்டுமே நாட்டின் வளர்ச்சி ஆகாது.
நாட்டில் உள்ள அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்தால்தான் உண்மையான வளர்ச்சியடைந்த தேசத்தை உருவாக்க முடியும். இளைஞர்கள் ஒழுக்க நெறிகளை பின்பற்ற வேண்டும்.
மனிதநேயமற்ற சமூகம் முன்னேறிய சமூகமாக கருதப்படாது. அதனால், மாணவர்கள் மனித நேயத்துடன் செயல்பட்டு எளிய மக்களின் நலனில் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.
விழாவில் கவுரவ விருந்தினரான சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி குமரேஷ் பாபு பேசுகையில், ``நாடு வளர்ச்சி அடைய மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்.
நாட்டின் வளர்ச்சிக்கு அரசின் பங்களிப்பு மட்டுமின்றி பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம்'' என்றார். விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் கோ.விசுவநாதன் பேசும் போது, ``மாணவர்கள் இந்தியாவின் எதிர்காலமாகத் திகழ்கின்றனர்.
இந்தியாவில் 5.4 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 2 லட்சம் வழக்குகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக தேக்க நிலையில் உள்ளன. மாவட்ட நீதிமன்றங்களில் 8 மாதங்களில் வழக்கை முடிக்க இலக்கு நிர்ணயிக்க வேண்டும். நீதித் துறையில் ஏழைகள் அணுகக்கூடிய சூழல் இல்லை. வசதிபடைத்தவர்கள் மட்டுமே அணுகக்கூடிய நிலை உள்ளது.
உயர்கல்வி வளர்ச்சிக்காக அரசு அதிக நிதியை ஒதுக்க வேண்டும். இளைஞர்கள் இந்தியாவின் பலமாக விளங்கி வருகின்றனர். எனவே, அவர்களுக்கு சிறந்த உயர்கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் பலவற்றில் துணைவேந்தர் இல்லை.
புதிய ஆளுநர் இதற்கு நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும்'' என்றார். இந்த கருத்தரங்கில் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கருத்தரங்கின் தொடக்க விழாவில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பங்கேற்று மாணவர்களிடம் உரையாற்றினார். 2 நாட்கள் நடந்த கருத்தரங்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி, டி.பாரத சக்கரவர்த்தி, எல்.சி.விக்டோரியா கவுரி, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினர்.