

புதுச்சேரி: புதுச்சேரி நீதிமன்றத்தில் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணை செப்.11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022-ம் ஆண்டு ஆக.8-ம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குளோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குளோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் (ஜேஎம் 1) விசாரணையில் உள்ள இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் பெற ஆஜராக உத்தரவிட்ட போதும், மரிய வில்சன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இந்த வழக்கை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவதில் விலக்கு அளிக்கவும், ரத்து செய்ய கோரியும் மரிய வில்சன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
அதையடுத்து இவ்வழக்கில் கடந்த 4-ம் தேதி தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிக்கையை பெற்றுக்கொண்டார்.
இதனையடுத்து, வழக்கு விசாரணை இன்றைய தினத்துக்கு புதுச்சேரி நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதன்படி, வழக்கு விசாரணை நீதிபதி சந்திரசேகர் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
மேலும், லாஸ்பேட்டை போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கில் தனக்கு எதிரான சட்டப் பிரிவுகளில் இருந்து விடுவிக்கக் கோரி அமைச்சர் மரிய வில்சன் தரப்பு வழக்கறிஞர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதற்கான பதில் மனு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, தாக்குதல் நடந்த சம்பவம் தொடர்பாக வீடியோவை ஊடகங்களுக்கு அளித்துவிட்டதாகக் கூறி சகோதரர் மனைவி மீது நீதிமன்ற அவமதிப்பு மனுவை தமிழக அமைச்சர் மரிய வில்சன் தரப்பில் தாக்கல் செய்தனர். அது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வராது என்று அமைச்சரின் சகோதரர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்களின் வாதங்களை முன்வைத்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, இரு மனுக்கள் தொடர்பான வழக்கு விசாரணை வரும் செப்.11-ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.