

புதுச்சேரி: சகோதரரை தாக்கியது தொடர்பான வழக்கில் தமிழக நிதியமைச்சர் மரியவில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். தொடர்ந்து இவ்வழக்கு வரும் 9-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழக நிதியமைச்சர் மரியவில்சன், கடந்த 2022-ம் ஆண்டு ஆக.8-ம் தேதி புதுச்சேரியில் வசித்து வரும் அவரது சகோதரர் மரியகுளோத் மற்றும் அவரது மனைவி கெரோலின் ஆகியோரை வீட்டின் கதவை உடைத்துச் சென்று தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து லாஸ்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் (ஜேஎம் 1) விசாரணையில் உள்ள இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் பெற ஆஜராக உத்தரவிட்டபோதும், மரியவில்சன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்த வழக்கை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவதில் விலக்கு அளிக்கவும் ரத்து செய்ய கோரியும் மரிய வில்சன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதற்கு, “நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் எனக் கூற மரியவில்சன் இங்கிலாந்து அரசரா” என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகவும் அறிவுறுத்தியது.
இதையடுத்து கடந்த ஆக.31-க்குப் பிறகு அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவார் என உறுதியளிக்கப்பட்டது. தொடர்ந்து புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் மரியவில்சன் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்து வந்த புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் சேரலாதன் கடந்த வாரம் மாஹேவுக்கு மாற்றப்பட்டார். இச்சூழலில், கடந்த 31-ம் தேதி முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அமைச்சர் ஆஜராகவில்லை. அப்போது உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விரைந்து விசாரிக்குமாறு அமைச்சரின் சகோதரர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இவ்வழக்கை செப்.4-ம் தேதிக்கு குற்றவியல் நீதித்துறை நடுவர் தள்ளிவைத்தார்.
இந்நிலையில் புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று மரியவில்சன் ஆஜரானார். தொடர்ந்து, வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை பெற்றுக்கொண்டார். இதையடுத்து நீதிபதி சந்திரசேகர் வழக்கு விசாரணையை வரும் 9-ம் தேதி தள்ளிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதால், இந்த வழக்கு தொடர்பாக எந்தவித கருத்தையும் தெரிவிக்க முடியாது” என கூறிவிட்டுச் சென்றார்.
உயிருக்கு அச்சுறுத்தல்
அமைச்சர் மரியவில்சன் மீது வழக்கு தொடர்ந்துள்ள அவரது சகோதரர் மரியகுளோத் செய்தியாளர்களிடம் கூறும்போது, “குடும்ப பிரச்சினை காரணமாகத்தான் எனக்கும், மரிய வில்சனுக்கும் தகராறு ஏற்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பதிவு சம்பவம் முடிந்து, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த பிறகு எனக்கு தொடர்ச்சியாக மிரட்டல் வருகிறது.
இதனால் உயிருக்கு பயந்து நான் துபாயில் தங்கி இருந்தேன். இப்போது வழக்கு விசாரணை என்பதால் புதுச்சேரி வந்துள்ளோம். தொடர்ச்சியாக எனக்கும், என் மனைவிக்கும் மிரட்டல் வருகிறது. எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. இப்போதும் விசாரணை முடிந்து வெளியூர் செல்கிறேன். பாதுகாப்பு கருதி நான் எங்கு செல்கிறேன் என தெரிவிக்க முடியாது” என்று கூறினார்